கோடை காலத்தில் உள்ளாடைகள் பராமரிப்பு

மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் உள்ளாடைகளை, சுத்தமாக துவைத்து, வெயிலில் நன்றாக உலரவைத்த பிறகே மீண்டும் அணிய வேண்டும். மற்ற துணிகளோடு சேர்த்து துவைக்காமல், உள்ளாடைகளை தனியாக துவைப்பதே சிறந்தது.

Update: 2023-04-02 01:30 GMT

கோடை காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் சரும நோய்கள் முக்கியமானவை. வெயிலின் தாக்கத்தால் வெப்பம் மற்றும் புழுக்கத்தின் காரணமாக வியர்வை அதிகமாக வெளியேறும். இது சருமத்தில் படிவதால் நுண்ணுயிரிகள் பெருகும். இவை ஏற்படுத்தும் பாதிப்புகளே சருமப் பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன.

குறிப்பாக இவற்றால் அந்தரங்க பகுதியில் இருக்கும் சருமம் அதிகமாக பாதிக்கப்படுகிறது. இதனால் அரிப்பு ஏற்படும். அந்தப் பகுதியில் சொரிந்து விடும்போது சருமம் சிவந்து, வீங்கி, தடித்துப் போகும். இதை கவனிக்காவிட்டால் நாளடைவில் கருப்பு திட்டுகளாக மாறக்கூடும். இத்தகைய பாதிப்புகளை தவிர்ப்பதற்கு, நீங்கள் அணியும் உள்ளாடைகளில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

உள்ளாடைகளை தேர்ந்தெடுக்கும்போது, அது எந்த வகையிலான துணியால் தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கவனியுங்கள். நமது தட்பவெப்ப நிலைக்கு எப்போதும் பருத்தித் துணியே சிறந்தது. இது வியர்வையை உறிஞ்சுவதற்கு ஏற்றது. பருத்தித் துணியின் இழைகள் சருமம் சுவாசிப்பதற்கு ஏற்றதாக அமைந்திருக்கும். இவ்வகை உள்ளாடைகளை அணியும்போது, வியர்வையின் தாக்கம் இல்லாமல் உலர்வாக இருக்கலாம். இதன்மூலம் சரும இடுக்குகளில் அரிப்பு, சிவந்து போதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

அடர்த்தியான வண்ணங்கள் ஒளியையும், வெப்பத்தையும் அதிகமாக உள்ளிழுத்துக்கொள்ளும். வெளிர் நிறங்கள் வெப்பத்தை பிரதிபலிக்கும். இதை அடிப்படையாகக் கொண்டே கோடை காலத்தில் வெளிர் நிற ஆடைகளை அணியும்படி பரிந்துரைக்கிறார்கள். இது உள்ளாடைகளுக்கும் பொருந்தும்.

உள்ளாடைகளைத் துவைக்கும்போது சோப்பு நுரை முழுவதுமாக நீங்கும்படி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவற்றில் உள்ள ரசாயனங்கள், வியர்வையுடன் சேர்ந்து சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் உள்ளாடைகளை, சுத்தமாக துவைத்து, வெயிலில் நன்றாக உலரவைத்த பிறகே மீண்டும் அணிய வேண்டும். மற்ற துணிகளோடு சேர்த்து துவைக்காமல், உள்ளாடைகளை தனியாக துவைப்பதே சிறந்தது. மாதவிடாயின்போது நாள் முழுவதும் ஒரே உள்ளாடையை அணியாமல், இரண்டு முறையாவது மாற்றுவது நல்லது.

கோடை காலத்தில் உள்ளாடைகளை இறுக்கமாக அணியாமல், உடலோடு சரியாக பொருந்தும் அளவில் அணிவது முக்கியம். இறுக்கமாக இருக்கும் எலாஸ்டிக் பேண்டுகள், சருமத்தில் வியர்வையைப் படியச் செய்து கிருமிகளின் தாக்கத்தை அதிகரிக்கும்.

லேஸ் மற்றும் வேலைப்பாடுகள் நிறைந்த உள்ளாடைகள் வியர்வையை படியச் செய்து சருமத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். எனவே, கோடை காலத்தில் இவ்வகை உள்ளாடைகளை தவிர்ப்பது நல்லது.

இரவில் தூங்கும்போது, பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்ட தளர்வான உள்ளாடைகள் அணிவது நல்லது. இதனால் சருமத்துக்கு போதுமான காற்றோட்டம் கிடைக்கும். சரும பிரச்சினைகள் ஏதேனும் இருந்தாலும் அது விரைவாக குணமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்