திருமணத்திற்கு முன்பு மணமக்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இருவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் கசந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, திருமணத்திற்கு முன்னதாக மணமக்கள் இருவரும் உடல் - மனம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.
திருமணம் என்பது வாழ்வில் இருவரை இணைக்கும் பந்தம் மட்டுமல்ல; வாழ்நாள் முழுவதும் இருவரும் இணைந்து சந்தோஷமாக மேற்கொள்ளும் பயணம். இதில், எந்தவித மனச்சங்கடமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இன்றைய சூழலில், திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இருவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் கசந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, திருமணத்திற்கு முன்னதாக மணமக்கள் இருவரும் உடல் - மனம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.
மரபுவழி சோதனை
இக்கால இளைஞர்களுக்கு சிறுவயதிலேயே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு நோய்கள் உருவாகி விடுகின்றன. அதற்கு இன்றைய வாழ்க்கைமுறை ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மரபுவழி நோய்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மரபுவழி பாதிப்புகளால் கருத்தரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மரபுவழி நோய்கள் அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும் அபாயம் உள்ளதால் திருமணத்திற்கு முன்னர் இருவருக்கும் மரபுவழி பாதிப்பு உள்ளதா என்பதை அறிவது அவசியம்.
கருத்தரிப்பு பரிசோதனை
தற்போது குழந்தை பெறுவதில் பெரும்பாலான தம்பதிகளுக்கு சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டுகள் பல கடந்தாலும், பிரச்சினையின் ஆணிவேரை கண்டறிய முடிவதில்லை. எனவே, திருமணத்திற்கு முன்னர் மணமக்கள் இருவரும் கருவுறுதல் சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். மணமக்கள் இருவரும் ஹார்மோன்களின் சமநிலை குறித்த பரிசோதனையை அவசியம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறப்பு குறித்து இருவரும் பேசி தெளிவு பெற்ற பின் திருமண பந்தத்தில் இணைவது நல்லது.
மனநல பரிசோதனை
வேலை, குடும்பம் என இரு நெருக்கடிகளை சமாளிப்பதால் இளைஞர்கள் பலரும் மனச்சோர்வு அடைகின்றனர். அதைச் சரிவர கையாள தெரியாததால், பல சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். அதனால், திருமணத்திற்கு முன்னர் இருவரும் மனநலம் சார்ந்த பரிசோதனைகளை செய்துகொள்ளலாம். ஆரம்பத்திலேயே உரிய ஆலோசனைகளைப் பெற்றால், திருமண உறவு பாதிக்காமல், குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தலாம்.
ரத்தப் பரிசோதனை
தம்பதிகளின் ரத்த வகை வேறுபாடாக இருக்கும்போது, சில நேரங்களில் குழந்தை பிறப்பதில் பிரச்சினைகள் உண்டாகலாம். ரத்த வகை நோய்கள் உள்ளனவா என்பது குறித்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதேனும் பாதிப்பு இருப்பின் அதற்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி தீர்வு பெறுவது அவசியம்.
எஸ்.டி.டி. சோதனை
திருமணத்துக்குப் பின்னர் உடல்ரீதியாக தம்பதிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பாலியல் தொடர்பான நோய்த் தொற்றுகளை அறியும் எஸ்.டி.டி. பரிசோதனையை முன்னெச்சரிக்கையாக செய்து கொள்ளலாம். அத்துடன், எச்.ஐ.வி. பரிசோதனையை செய்து கொள்வதும் பாதுகாப்பானது.