வருங்கால துணையுடன் கலந்தாலோசிக்க வேண்டியவை
இருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காதவைகளைப் பற்றி முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. இதன் மூலம் திருமணத்துக்கு பின்பு ஏற்படும் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம்.;
திருமண பந்தத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது உண்டாகும் ஏமாற்றம், தம்பதிகளை பிரிவு வரை கொண்டு செல்கிறது. இதைத் தவிர்க்க, மணவாழ்க்கையில் இணையப்போகும் இருவரும், திருமணத்திற்கு முன்பே சில விஷயங்களைக் கலந்து பேசி முடிவு செய்து கொள்வது அவசியம். அதில், சிலவற்றை இங்கே காணலாம்.
குழந்தைகள்:
திருமண வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் குழந்தைகளை எப்போது பெற்றுக்கொள்வது என்பதில் எந்த முடிவை எடுத்தாலும், அதை தம்பதியாகப் போகும் இருவரும் கலந்து ஆலோசிக்க வேண்டும். எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்வது, அவர்களை எப்படி வளர்ப்பது, நெறிப்படுத்துவது? என்பதைப் பற்றிப் பேசி, முடிவு செய்ய வேண்டும். இதில், வாழ்க்கை முழுவதும் ஒரே மாதிரியான கருத்து இருவருக்கும் வேண்டும். திருமணத்திற்கு முன்பு இது குறித்து விவாதிப்பது, எதிர்காலத்தை இனிமையாக்கும்.
நிதி சார்ந்தது:
குடும்பத்தின் வளர்ச்சிக்கு பணம் அவசியம். ஒருவரைத் திருமணம் செய்வதற்கு முன்பு அவரது பொருளாதார நிலைமை எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தால், அதை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி இருவரும் கலந்தாலோசித்து செயல்படலாம்.
வேலை சார்ந்தது:
வீட்டு வேலைகளில் கணவன்-மனைவி இருவரின் பங்களிப்பும் அவசியம். குடும்பப் பொறுப்புகளைப் பிரித்து செயல்படுவதற்கு இருவரும் தயாராக இருக்க வேண்டும். இதுபற்றி முன்கூட்டியே ஆலோசித்து முடிவு செய்வது, திருமணத்துக்கு பின்பு வாழ்க்கை சுலபமாக செல்வதற்கு வழிவகுக்கும்.
பழக்கவழக்கம்:
இருவருக்கும் உள்ள தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், அவற்றில் நன்மை தருபவை, இருவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துபவை, எதிர்மறையான பழக்கங்கள் இருந்தால் அவற்றை தவிர்ப்பதற்கான வழிகள் என அனைத்தையும் பேசி முடிவு செய்ய வேண்டும். இது குறித்து எதிர்காலத்தில் இருவருக்கும் பாதிப்பு வராமல் கவனமுடன் முடிவெடுக்க வேண்டும்.
விருப்பு, வெறுப்புகள்:
இருவருக்கும் பிடித்த மற்றும் பிடிக்காதவைகளைப் பற்றி முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது. இதன் மூலம் திருமணத்துக்கு பின்பு ஏற்படும் மனக் கசப்புகளைத் தவிர்க்கலாம்.
அந்தரங்கம்:
தம்பதிக்குள் இருக்கும் நெருக்கம் தனிப்பட்டது. இதில் பிறரின் தலையீடு எப்போதும் இருக்கக்கூடாது. கணவன்-மனைவி இருவருக்குமான தனிப்பட்ட விஷயங்களில் வேறு எந்த நபரையும் நுழைய விடாமல் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். இது குறித்து முன்கூட்டியே பேசி முடிவு செய்வது சிறந்தது.