கண்காணிப்பு கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
உயர்தரமான கண்காணிப்பு கேமராக்களில் மோஷன் சென்சார்களும் இடம்பெற்றிருக்கும். இவை வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தோன்றும் சந்தேகிக்கும் வகையிலான ஒலி அல்லது இயக்கத்தை கண்டறிந்து, அதற்கான செயலி வழியாக நம்மை எச்சரிக்கும்.
வீடு மற்றும் சுற்றுப்புறத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு கேமரா பொருத்துவது சிறந்த வழியாகும். நீங்கள் எங்கு இருந்தாலும், உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது? அன்னியர்கள் யாரேனும் உங்கள் இடத்துக்குள் நுழைகிறார்களா? என்பதை தெரிந்துகொள்ளும் வசதி கண்காணிப்பு கேமராக்களில் உள்ளது. இவற்றை வாங்கும்போது எந்தெந்த விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும், கண்காணிப்பு கேமராக்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய தகவல்கள் இதோ…
கேமராவின் வரம்பு:
குறைந்தபட்சம் 20 முதல் 25 மீட்டர் தூரம் வரை கண்காணிக்கும் வகையிலான கேமராவைப் பொருத்துவது நல்லது. உங்களுடைய வீட்டு வரம்பு எல்லை அதிகமாக இருந்தால், அதற்கு ஏற்ற திறன் கொண்ட கண்காணிப்பு கேமராவைப் பொருத்த வேண்டும்.
படத்தின் தரம்:
கேமராவில் பதிவாகும் படத்தின் தரம் 720 மற்றும் 1080 மெகா பிக்சல் திறன் கொண்டதாக இருக்க வேண்டும். இத்தகைய கேமராக்கள் 24 மணி நேரத்தில் 30 ஜி.பி.க்கும் அதிகமான இடத்தைப் பயன்படுத்தும். உயர்தரமான கண் காணிப்பு கேமராக்களில் மோஷன் சென்சார்களும் இடம்பெற்றிருக்கும். இவை வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தோன்றும் சந்தேகிக்கும் வகையிலான ஒலி அல்லது இயக்கத்தை கண்டறிந்து, அதற்கான செயலி வழியாக நம்மை எச்சரிக்கும்.
எஸ்.டி. கார்டு ஸ்லாட்:
ஒவ்வொரு வகை கண்காணிப்பு கேமராவிலும், வெவ்வேறு விதமான வசதிகள் இருக்கும். நீங்கள் வாங்கும் கேமராவில், மெமரிகார்டு பொருத்தும் வசதி உள்ளதா? அதில் எந்தவகையான கார்டைப் பொருத்தலாம்? அதிக ஜி.பி.யுடன் கூடிய கார்டை பொருத்த முடியுமா? ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.
எளிதில் பொருத்தும் வசதி:
ஒயர் இணைப்பு கொண்ட அல்லது ஒயர்லெஸ் கேமரா என உங்கள் வீட்டில் உள்ள இடத்துக்கு ஏற்றவாறு கண்காணிப்பு கேமராவை தேர்வு செய்வது அவசியம். சில கேமராக்கள் சுவரில் பொருத்தும் வகையில் மேக்னடிக் பேஸ் அல்லது ஸ்டிக்கி பேட்களுடன் வருகின்றன. இவற்றுக்கான செயலியை பதிவிறக்கம் செய்து, உங்களுடைய மொபைல் போன் வழியாக கண்காணிக்கலாம். தண்ணீரில் நனைந்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையிலான கேமராக்களை தேர்வு செய்வது சிறந்தது.
கேமராவின் வசதி:
கண்காணிப்பு கேமரா வாங்கும்போது பலரும் அதில் இருக்கும் லென்ஸின் திறனை மட்டுமே கவனிப்பார்கள். லென்ஸ்சுக்கு பக்கத்தில் உள்ள சிறிய பல்புகள், இரவு நேரத்திலும் காட்சியை நேர்த்தியாக பதிவு செய்யும் வசதி கொண்டது. இவற்றில் எல்.இ.டி பல்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், இரவுக் காட்சிகள் தெளிவாகப் பதிவாகும். கேமரா வாங்கும்போது, அதனுடன் பவர் அடாப்டர்கள், சுவரில் பொருத்தும் ஸ்டாண்ட், பவர் திருகுகள், ஒயர்கள் போன்ற இதர பாகங்களையும் கவனித்து வாங்க வேண்டும். கேமராவுக்கான உத்தரவாத கால அளவை தெரிந்து வைத்திருப்பது நல்லது.
பராமரிப்பு:
கேமராவை பொருத்திய பின்பு அதை முறையாக பராமரிப்பது முக்கியம். கேமரா லென்சை சுத்தம் செய்வது, மூன்று மாதத்திற்கு ஒருமுறை கேபிள்களின் இணைப்பை சரி செய்வது, அடிக்கடி செயலியை புதுப்பிப்பது, கேமராவில் பதிவாகி இருக்கும் தேவையற்ற காட்சிகளை அழிப்பது ஆகியவற்றை அவ்வப்போது செய்து வந்தால், கண்காணிப்பு கேமராவை பல ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.