வருங்காலத்தை வளமாக்கும் வரி சேமிப்பு
வருமான வரி சட்டத்தின் படி, உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள் செலுத்துவதற்கு பிரிவு 80 (டி) யின் படி, ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.;
குடும்பத்தில் கணவன்-மனைவி இருவரும் வருமானம் ஈட்டுவது அவசியமானது. அதைப்போல தங்கள் வருங்காலத்துக்காக சேமித்து வைப்பதும் முக்கியமானது. வரிகளை திட்டமிட்டு செலுத்துவதன் மூலம் வரிச் சலுகைப் பெறுவதும் சேமிப்பதற்கான வழிகளில் ஒன்றாகும்.
வரி சேமிப்பு என்பது தம்பதிகளின் எதிர்காலத்தை சரியாகத் திட்டமிடுவதற்கு உதவும் ஒரு யுக்தியாகும். வரியை சேமிப்பதற்கு ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் திட்டமிட வேண்டும். இதற்காக நிதி ஆலோசகர்கள் கூறும் சில வழிகள் இதோ…
மருத்துவம் மற்றும் காப்பீடு:
இந்திய வருமான வரி சட்டத்தின் படி, உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள் செலுத்துவதற்கு பிரிவு 80 (டி) யின் படி, ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதில் ரூ.20 ஆயிரம் காப்பீட்டுப் பிரீமியங்களைச் செலுத்துவதற்கும், ரூ.5 ஆயிரம் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைக்கான கட்டணங்கள் செலுத்துவதற்கு துணை வரம்பாகவும் இருக்கும். ஆண்டுதோறும் முறையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து, ரூபாய் 5 ஆயிரம் பெறவில்லை என்றால், இந்த வரிச் சலுகையை இழக்க நேரிடும். இது குடும்பத்தில், ஒரு நபர் மட்டும் வருமானம் ஈட்டுபவராக இருந்தால் கிடைக்கும் பலன். கணவன்-மனைவி இருவரும் சம்பாதிப்பவர்களாக இருந்தால், தனித்தனியாகச் சலுகைப் பெறுவதுடன், பலனையும் இரட்டிப்பாக்கலாம்.
வீட்டுக்கடன்:
கணவன்-மனைவி இருவரும் வரி செலுத்துபவர்களாக இருந்தால், வீட்டுக் கடனை 50:50 என்ற அடிப்படையில் இணை கடனாகப் பெறலாம். இதனால், இரு மடங்கு வரிச் சலுகைப் பெற முடியும். வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 (சி) - ன் கீழ் தனிநபர்கள் வீட்டுக் கடனின் அசல் தொகையில் இருந்து ரூ.1,50,000 வரை வரி விலக்கு பெற வழி உண்டு. இருவராக இருக்கும்பட்சத்தில், ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகையைப் பெறலாம்.
குழந்தைகளின் கல்வி:
குழந்தைகளின் கல்விக்கான செலவில் ஐ.டி. சட்டத்தின் பிரிவு 80 (சி) மூலம் வரியைச் சேமிக்கலாம். வரி விலக்கு சலுகையில், ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தைப் பல்வேறு வழிகளில் திரும்பப் பெற முடியும். வரி செலுத்தும் தனிநபர் அதிகபட்சம் 2 குழந்தைகளின் கல்விக்காகமட்டுமே இந்த விலக்கைப் பெற முடியும். கணவன்-மனைவி இருவரும் இணைந்து ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.
பயணப்படி சலுகை:
பெரும்பாலான அலுவலகங்களில் பணியாளர்களுக்குப் பயணப்படி சலுகை வழங்கப்படும். வருமான வரிச்சட்டம் 1961-ன் கீழ், விடுமுறைச் செலவிலும் வரி விலக்கு பெறலாம். அதேசமயம் இதற்கு அந்தந்த நிறுவனங்களில் வரையறைகள் உண்டு. அதற்கு உட்பட்டு வரிச் சலுகையைப் பெறலாம்.
சரியாக திட்டமிட்டு செயல்பட்டால், வருமான வரிச் சலுகையைப் பெற்று எதிர்காலத்துக்காக சேமிக்கலாம்.