வீட்டிலேயே வளர்க்கலாம் 'சுவீட் கார்ன்'
வீட்டில் வீணாகும் காய், கனி கழிவுகளைக் கொண்டு உரம் தயாரித்து, அத்துடன் வேப்பம் புண்ணாக்கு, மக்கிய சாண எருவும் கலந்து மண் கலவையினைத் தயாரித்துப் பயன்படுத்தினால், செடி ஆரோக்கியமாக வளரும்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த சண்முகப்பிரியா, முதுகலை ஆங்கிலப் பட்டதாரி. உடல் நலத்தை மேம்படுத்துவதற்காக உணவுப் பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டுவர நினைத்தார். அதற்கான முயற்சியின் முதல் படியாக சமைப்பதற்குத் தேவையான காய்கறிகளை, தானே விளைவிக்கத் தொடங்கினார்.
பச்சை மிளகாய், தக்காளி, கீரை என சிறுசிறு காய்கறிச் செடிகளுடன் 2018-ம் ஆண்டு வீட்டுத் தோட்டத்தை அமைத்தார். இதன் பலனாக தற்போது மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, டிராகன் பழம், ஸ்டார் பழம், சிவப்பு வெண்டை என எண்ணற்ற காய், கனிகளை விளைவிக்கிறார். அவர் பயன்பெற்றதோடு மட்டு மில்லாமல், பிறரையும் ஊக்குவிக்கும் வகையில் செடி வளர்ப்பு குறித்து வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த சுவீட் கார்ன்-ஐ, எவ்வாறு எளிய முறையில் வீட்டிலேயே பயிரிடலாம் என்று இங்கே பகிர்ந்துகொள்கிறார்.
விதை விதைத்தல்
ஸ்வீட் கார்ன் விதைகளை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். எறும்பு அரிப்பில் இருந்து தடுப்பதற்காக ட்ரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனஸ் உயிரி உரத்தில் தோய்த்து எடுத்து நிழலான பகுதியில் உலர்த்த வேண்டும். இதன் மூலம் விதையின் முளைப்புத் திறனும் அதிகரிக்கும். எலிகளின் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில், விதைகளை டிரேவில் நட்டு நாற்று வந்தபிறகு, நடவு செய்யலாம்.
மண் கலவை
வீட்டில் வீணாகும் காய், கனி கழிவுகளைக் கொண்டு உரம் தயாரித்து, அத்துடன் வேப்பம் புண்ணாக்கு, மக்கிய சாண எருவும் கலந்து மண் கலவையினைத் தயாரித்துப் பயன்படுத்தினால், செடி ஆரோக்கியமாக வளரும். சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் நன்றாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் ஒரு அடி இடைவெளி விட்டு விதை நடவு செய்தால், மூன்றாவது வாரத்தில் ஒரு அடி உயரத்துக்கு செடி வளர்ந்துவிடும்.
நிலத்தில் செடி வளர்ப்பதற்கான சூழல் இல்லாதவர்கள் 'க்ரோ பேக்' அல்லது தொட்டிகளிலும் வளர்க்கலாம். செடி வளர, வளர வேர்ப்பகுதி மேலெழுந்து கொண்டே வரும் என்பதால், அவ்வப்போது செடிக்குத் தேவையான மண்ணை நிரப்பிக்கொண்டே வர வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், காற்றின் அசைவால் செடி சாய்ந்து விடுவதையும் தடுக்கலாம்.
மகரந்தச் சேர்க்கை
செடி நட்ட 2 மாதங்களில் கதிர் விடும். அப்போது, ஆண் பூவில் இருக்கும் துகள்கள், பெண் பூ மீது விழுந்து மகரந்தச் சேர்க்கை நடைபெற வேண்டும். காற்றின் அசைவினால் இயல்பாக மகரந்தச் சேர்க்கை நடைபெறாத சமயத்தில், செடியினை அசைத்து செயற்கையாக மகரந்தச் சேர்க்கையினை நடைபெறச் செய்ய வேண்டும்.
சோளக்கதிர் பறிப்பு
செடி நட்டு 80 முதல் 90 நாட்களில் சோளக் கதிரினைப் பறிக்கலாம். நாட்டுச் சோளம் என்றால், ஒரு செடிக்கு மூன்று முதல் நான்கு கதிர்கள் காய்க்கும். ஆனால், சுவீட் கார்னில் ஒரு செடிக்கு ஒரு கதிர் தான் கிடைக்கும். இயற்கை உரங்கள் மட்டுமே இட்டு வளர்ப்பதால், கடைகளில் வாங்குவதைவிட சோளம் சற்று சிறியதாக இருக்கும். ஆனால், சுவை அதிகமாக இருக்கும்.