பாலின மாற்றத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளை ஆதரியுங்கள்
திருநங்கைகள் பற்றியும், பாலின மாற்றத்தின் உண்மைத் தன்மை பற்றியும் தெரிந்துகொண்டு, குழந்தைக்கு உங்களின் ஆதரவை வழங்க வேண்டும்.;
'பாலின மாற்றம்' என்பது ஒருவருக்கு எந்த வயதிலும் ஏற்படலாம். உடலில் சுரக்கும் ஹார்மோன் மாற்றத்தின் வெளிப்பாடான இதை 'பாலின டிஸ்போரியா' என்று அழைப்பார்கள்.
இதனால் பாதிக்கப்படுபவர்கள், எதிர் பாலினத்தவரின் வழக்கமான உடை மற்றும் சமூகச் செயல்பாடுகளை விரும்புவார்கள். எதிர்பாலினமாக மாறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இது இயற்கையான மாற்றம் என்றாலும், சமூகத்தைப் பொறுத்தவரை, பாலின மாற்றத்தால் பாதிக்கப்படும் நபரை பார்க்கும் விதம் மாற வேண்டியது அவசியம்.
இவர்களில் பலருக்கு, தங்கள் பெற்றோரின் ஆதரவுகூட கிடைப்பது இல்லை. இதனால், பாலின மாற்றத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, விரக்தி, மனஅழுத்தம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர்க்க, பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்:
அறிகுறிகளைக் கண்டறியுங்கள்:
பிள்ளைகள் பருவ வயதை அடையும்போதுதான், ஹார்மோன்களில் மாற்றம் அதிகமாக ஏற்படும். அப்போதுதான், பாலின மாற்றம் தொடர்பான பிரச்சினை தலைதூக்கத் தொடங்கும். எனவே, பிள்ளைகள் பருவ வயது அடையும்போது, பெற்றோரின் கவனிப்பு கட்டாயம் தேவை.
இவர்களுக்கு, எதிர் பாலினத்தவராக இருக்க வேண்டும் என்ற தீவிர ஆசை ஏற்படும். குறிப்பாக, பிற பாலினத்தவரின் உடைகளை அணிய விரும்புவார்கள். உடல் ரீதியான மாற்றத்தால் ஏற்படும் அசவுகரியம் அதிகரிக்கும். அதனால் கோபத்தின் மூலம் தங்கள் இயலாமையை வெளிப்படுத்துவார்கள்.
உணர்வுகளை உணருங்கள்:
பிள்ளைகளிடம் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தவுடன், அவர்களை ஒதுக்கி வைக்காமல், அவர்களுடன் நட்பாகப் பேச வேண்டும்.
அவர்கள் மனம் விட்டுப் பேசுவதற்கும், தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும்.
'பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள். கைவிட மாட்டார்கள்' என்ற நம்பிக்கையைப் பிள்ளைகள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.
உங்கள் குழந்தைகள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், அவர்களுக்கும் சில உணர்வுகள் இருக்கும். அதைக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கு நிபந்தனையற்ற அன்பை வழங்குங்கள்.
பருவ வயதை எட்டிய பிள்ளைகளிடம் பாலின ரீதியாக மாற்றம் ஏற்பட்டால், அந்த அனுபவத்தைப் பற்றி பெற்றோர் கேள்வி கேட்க வேண்டும். அவர்களின் மன மற்றும் உணர்ச்சி செயல்முறைகளை அடையாளம் கண்டு, நிலைமையைப் புரிந்து கொள்வது அவசியம். தகுந்த நிபுணர்களைக் கண்டறிந்து இது குறித்து ஆலோசித்து தெளிவு பெற வேண்டும்.
திருநங்கைகள் பற்றியும், பாலின மாற்றத்தின் உண்மைத் தன்மை பற்றியும் தெரிந்துகொண்டு, குழந்தைக்கு உங்களின் ஆதரவை வழங்க வேண்டும். இது சாதாரண பிரச்சினைதான் என்பதைப் புரிய வைத்து பிள்ளைகளுக்கு நம்பிக்கையூட்டுவது பெற்றோரின் கடமை.
பாலின மாற்றம் காரணமாக உணர்வு ரீதியான பிரச்சினைகள் ஏற்படும். கவலை, மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கும் வழிவகுக்கும். எனவே, தகுந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெறவேண்டும்.கல்வி நிறுவனங்களிலும், அந்தக் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.