சிக்கனத்துக்கும், சேமிப்புக்கும் ஏற்ற சமையல்
சமையலில் சேர்க்கும் காய்கறிகளின் நிறம், சத்து, சுவை ஆகியவை மாறாமல் இருக்கும் என்பது இந்த சமையல் முறையின் சிறப்பம்சம். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.;
இன்றைய நவீன உலகில் பெண்கள் தொழில், வேலை, குழந்தை வளர்ப்பு, குடும்ப பொறுப்புகள், உறவுகள், பொழுதுபோக்கு, நட்பு என அனைத்திற்கும் நேரம் செலவழித்து, சரியான முறையில் மேலாண்மை செய்வது அவசியம். இவற்றில் சமையல் அறை வேலைகள், பெண்களின் பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொள்கின்றன.
நேரமின்மை காரணமாக வெளியில் வாங்கிச் சாப்பிடும் உணவுகள், ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு பணத்தையும் விரயமாக்குகின்றன. இதை மனதில் கொண்டு சுலபமாகவும், விரைவாகவும் சமைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'ஓ.பி.ஓ.எஸ் (OPOS)' எனும் 'ஒன் பாட் ஒன் ஷாட்' சமையல் முறை.
இந்த முறையில் உணவு அதிகப்படியான தீயில், மிகக் குறைந்த நேரத்தில் சமைக்கப்படும். இந்த தொழில்நுட்பம் 'பிரஷர் பேக்கிங்' என்று அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் சமையலை சுலபமாகவும், விரைவாகவும் செய்து விடலாம். கை வலிக்க கிளறிக் கொண்டே இருக்க வேண்டாம். அடிக்கடி மேற்பார்வை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சமையலில் சேர்க்கும் காய்கறிகளின் நிறம், சத்து, சுவை ஆகியவை மாறாமல் இருக்கும் என்பது இதன் சிறப்பம்சம். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
குறைவான எண்ணெய் பயன்படுத்துவதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த முறையை தாராளமாக முயற்சி செய்யலாம்.
'ஒன் பாட் ஒன் ஷாட்' முறையின் மூலம், குறைந்த நேரத்தில் பலருக்கு உணவு தயாரிக்க முடியும். வீட்டில் பயன்படுத்தும் பிரஷர் குக்கருடன், இதற்கான தனி குக்கர் இருந்தால் போதும். அதிக சமையல் பாத்திரங்கள் தேவை இல்லை.
இந்த முறையின் மூலம் அதிக அளவு பாத்திரங்களைத் துலக்குவது, எண்ணெய் பிசுக்கான அடுப்பு மற்றும் மேடையை சுத்தம் செய்வது போன்ற சமையலறைப் பராமரிப்புகள் குறைகின்றன. நேரம், பணம், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றை கணிசமாக சேமிக்க முடியும்.
'ஒன் பாட் ஒன் ஷாட்' முறையில் சமைப்பதற்கான குறிப்புகள் சுலபமாக இருப்பதால், சரியான அளவுகளில் செய்யும் போது, உணவின் சுவையும், பதமும் மாறுவதில்லை.
இந்த முறையில் கேசரி, மைசூர்பாக், பீட்ரூட் அல்வா, சாம்பார், குருமா, ரசம், தக்காளி தொக்கு, அவியல், கூட்டு, பன்னீர் பட்டர் மசாலா, பாஸ்தா, பாவ்பாஜி, பட்டர் சிக்கன் போன்ற உணவுகளை சமைக்கலாம்.
'ஒன் பாட் ஒன் ஷாட்' முறையில் சமைப்பதற்கு, அதற்கான சிறப்பம்சங்கள் கொண்ட குக்கரை வாங்க வேண்டும். இந்த வகை சமையல் முறையைக் கற்றுக்கொள்ள பயிற்சியும், முயற்சியும் தேவை.