விடுதி மாணவிகள் பாதுகாப்பில் பெற்றோரின் பங்கு
50 மாணவிகளுக்கு ஒரு காப்பாளர் என்ற விகிதத்தில் இருப்பதுடன், 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க விடுதி பாதுகாவலரும் இருக்க வேண்டும்.;
கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் குடும்பத்தைப் பிரிந்து, பெற்றோர் துணையின்றி விடுதிகளில் தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தங்கள் பெண் குழந்தைகளை விடுதியில் சேர்ப்பதற்கு முன்னர் பெற்றோர் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விடுதியில் தங்கியுள்ள மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அனைத்து மகளிர் விடுதிகளையும் ஒழுங்குபடுத்தும் வகையில், 2014-ம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டத்தை அரசு இயற்றியுள்ளது.
அதன்படி, மாணவியர் அல்லது மகளிர் விடுதியில் 4 பேர் தங்கக்கூடிய அறை 120 சதுர அடி பரப்பு கொண்டதாகவும், 6 பேர் தங்கக்கூடிய அறை 240 சதுர அடி பரப்பு கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
50 மாணவிகளுக்கு ஒரு காப்பாளர் என்ற விகிதத்தில் இருப்பதுடன், 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க விடுதி பாதுகாவலரும் இருக்க வேண்டும். விடுதிக் காப்பாளர், பாதுகாவலர் ஆகியோர் உள்ளூர் காவல் நிலையத்தில் தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டும். விடுதிக் காவலர், அவசர காரணங்கள் தவிர மற்ற நேரங்களில் விடுதிக் கட்டிடத்திற்குள் நுழைவது கூடாது.
மாணவிகள் வெளியே செல்லும் நேரம், திரும்பும் நேரம் குறித்து பதிவு செய்வதுடன், இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மாதம் ஒரு முறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.
விடுதியில் தங்கியுள்ள பெண்களை பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பாளர் தவிர பிறர் சந்திக்க அனுமதிக்கக் கூடாது. விடுதி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
விடுதிக் கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து தடையில்லாச் சான்றை தீயணைப்புத் துறையிடம் பெற்றிருப்பதுடன், பொது சுகாதாரம் குறித்து சுகாதாரத் துறையிடம் தர நிர்ணயச் சான்றும் பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன், உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட சமூகநலத் துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்து உரிமம் பெற்ற பின்னரே மாணவிகளுக்கான விடுதி, காப்பகம் அல்லது இல்லம் நடத்தப்பட வேண்டும் அத்துடன் இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். உரிமம் புதுப்பிக்கப்படும் சமயத்தில் சமூகநலத் துறையினர் நேரில் ஆய்வு செய்வார்கள் என்பதும் அரசின் சட்ட நெறிகளாகும்.
பள்ளி, கல்லுாரிக்கு அருகில் விடுதி உள்ளதா, அலுவலகம் சென்று தாமதமாக திரும்பினால் பாதுகாப்பாக இருக்குமா என அக்கம்பக்கம் விசாரிக்கும் பெற்றோர் மேற்கண்ட விபரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெளியூர்களில் தங்கிப்படிக்கும் மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதற்காக நகர்ப்புறக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள விடுதிகளை தேர்வு செய்யும்போது, விடுதி அறைகளில் ரகசிய கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும்.
பெற்றோர், விடுதி பற்றிய அடிப்படை மற்றும் கூடுதல் தகவல்களை நன்றாக விசாரித்து அறிவது அத்தியாவசியம்.