குடும்ப உறவை பாதுகாக்கும் உளவியல் சிகிச்சைகள்...
தம்பதிகளுக்குள், உறவை இழப்போம் என்ற பயம் தூண்டப்படும்போது தடுமாற்றம், பதற்றம் ஏற்படும். இந்த சிகிச்சையின் மூலம் ஒருவர் மற்றவரின் தேவைகள், பாதுகாப்பின்மை உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும்.;
தம்பதிகளுக்குள் ஏற்படும் சிறு சிறு கருத்துவேறுபாடுகளை, இருவரும் மனம் விட்டு பேசி விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் எளிதாக தீர்த்துக்கொள்ளலாம். அதேசமயம் கருத்துவேறுபாடு தீவிரமாகும்போது, பிரச்சினையை தீர்ப்பதற்கு உளவியல் ரீதியான ஆலோசனை தேவைப்படும்.
கணவன்-மனைவிக்குள் புரிதலை உண்டாக்கி, சேர்ந்து வாழ்வதற்கு வழி செய்யும் சில உளவியல் சிகிச்சை முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
காட்மேன் முறை:
இது கணவன்-மனைவி இருவரும் பிரச்சினைகளை நேர்மறையாக எதிர்கொண்டு சமாளிக்கும் வழிகளைக் கற்றுக்கொடுக்கும் அணுகுமுறையாகும். இந்த முறை, உறவின் அனைத்து கட்டங்களிலும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தம்பதிகளைத் தயார்படுத்த உதவுகிறது. இதன் மூலம் பணம், பெற்றோர், தாம்பத்யம், துரோகம் தொடர்பான குறிப்பிட்ட காரணங்களால் உண்டாகும் பிரச்சினைகளின் அடிப்படையை உணர்ந்து அதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து, தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும்.
கதை சிகிச்சை:
இந்த முறையில், கணவன்-மனைவி தங்கள் பிரச்சினைகளை கதை வடிவில் விவரிப்பது மற்றும் அவர்களின் கதைகளை மீண்டும் எழுதுவது போன்ற அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. இதைச் செய்வதால், தம்பதியினர் சூழ்நிலையில் புதிய கண்ணோட்டத்தைப் பெறுகின்றனர். எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றி, கடந்த காலத்தை ஆராய இது உதவும். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், தங்கள் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வுகள் காண முடியும்.
உணர்வு ரீதியான கவனிப்பு சிகிச்சை:
தம்பதிகளுக்குள், உறவை இழப்போம் என்ற பயம் தூண்டப்படும்போது தடுமாற்றம், பதற்றம் ஏற்படும். இந்த சிகிச்சையின் மூலம் ஒருவர் மற்றவரின் தேவைகள், பாதுகாப்பின்மை உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். இதில், கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, கணவன்-மனைவி, தங்கள் துணையின் உணர்வுப்பூர்வமான பதில்களைப் தெரிந்து கொள்ள முடியும். இது அவர்களின் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்.
பிரதிபலிப்பு கேட்டல் சிகிச்சை:
பெரும்பாலான தம்பதிகளுக்கிடையே எழும் பொதுவான புகார், கணவர் (அல்லது மனைவி) தங்களின் பேச்சைக் கேட்பதில்லை என்பதுதான். இதற்காகவே, 'பிரதிபலிப்பு' கேட்டல் என்ற அணுகுமுறையை பயன்படுத்துகிறார்கள்.
இதில் ஒருவர் சொல்வதை, மற்றவர் கேட்கும்படி செய்கிறார்கள். இதனால், சிக்கல் எளிதில் தீர்க்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது 2 உத்திகளை உள்ளடக்கியது. ஒன்று, ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முயல்வது. மற்றொன்று, உள்ளடக்கம் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டதா என்பதை உறுதி செய்ய அந்த தகவலை உரியவரிடம் திரும்பத் திரும்பச் சொல்வது. இதனால், நம் துணை என்ன சொல்ல வருகிறார் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த தெரபி பிரச்சினையின் தீவிரத்தைப் பெருமளவு குறைக்கிறது.
இமாகோ உறவு சிகிச்சை தெரபி:
ஒருவரின் குழந்தை பருவத் தேவைகள் மற்றும் சிறுவயதில் ஏற்பட்ட பிரச்சினைகளின் பாதிப்புகள், பின்னாளில் உணர்திறன்களாக மாறி உறவுகளில் மோதல்கள் அல்லது வலியை ஏற்படுத்தும். இந்த சிகிச்சை முறையில், குழந்தைப் பருவ அனுபவங்களுக்கும், வயது வந்தோருக்கான உறவுக்கும் இடையிலான தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
எதிர்மறை எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகளை அடையாளம் காணும் வகையில் இந்த சிகிச்சை முறை கையாளப்படும். இவற்றை படங்கள் மூலம் பார்வைக்கு கொண்டு வந்து, பிரச்சினைக்கு தீர்வு காண்பதே சிகிச்சை முறையின் நோக்கமாகும்.