பெற்றோரின் மறுமணமும், குழந்தைகளின் மனநிலையும்

நீங்கள் திருமணம் செய்துகொள்பவருக்குக் குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் எப்படி அன்புடன் இருப்பது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.;

Update:2022-11-13 07:00 IST

சூழ்நிலையின் காரணமாக விவாகரத்து மற்றும் துணையின் இழப்பை சந்திப்பவர்கள் மறுமணம் செய்து கொள்கின்றனர். அவ்வாறு புதிய வாழ்வில் ஈடுபடும்போது, இருவரில் ஒருவருக்கு அல்லது

இருவருக்குமே குழந்தைகள் இருக்கலாம். அந்தக் குழந்தைகள் புதிய உறவை ஏற்றுக்கொள்வதில் தான் பலரும் சவால்களை சந்திக்கின்றனர். இதை வெற்றிகரமாக எதிர்கொண்டு குழந்தைகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கான வழிகள் இதோ…

யதார்த்தத்தை விளக்குங்கள்:

உங்கள் துணையின் இழப்போ, பிரிவோ உங்களை விட குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும். அத்தகைய சூழ்நிலையில் இழந்த உறவின் இடத்தில் மற்றொருவரை உடனே அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த சமயத்தில், புதியவருடன் மறுமணம் செய்து கொள்ளும்போது, அது குழந்தைகளுக்குக் குழப்பத்தை தரும். இது உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க மறுமணம் செய்ய முடிவு எடுக்கும் முன்பு, அதற்கான காரணத்தை குழந்தைகளுக்கு விளக்குங்கள். குழந்தைகளின் சம்மதம் கிடைக்கும் வரை காத்திருங்கள்.

வெளிப்படையாக இருங்கள்:

நீங்கள் மறுமணம் செய்யப்போகும் முடிவை பிள்ளைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அதை அவர்களிடம் திணிக்க முயற்சிக்கக் கூடாது. இது பிள்ளைகளை மூர்க்கத்தனமான நட

வடிக்கைகளில் ஈடுபட வைக்கும். புதிய சூழ்நிலையை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் தேவைப்படும். புதிய உறவைப் பற்றிய விஷயத்தில் குழந்தைகளுடன், முடிந்தவரை வெளிப்படையாக இருங்கள்.

எதிர்பார்ப்பைக் குறையுங்கள்:

நீங்கள் திருமணம் செய்துகொள்பவருக்குக் குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் எப்படி அன்புடன் இருப்பது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் பொறுமையுடன் செயல்பட வேண்டும். விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்து கொண்டால், எப்போதும்போல பெற்றோருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கலாம் என்பதை குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். புதிய உறவு வந்தாலும், அவர்களது முந்தைய உறவில் பாதிப்பு வராது என்று உணர்த்த வேண்டும். இது உங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். நீங்கள் வாழ்க்கையில் மற்றொரு நபரை ஏற்றுக்கொள்வது, உங்கள் பிள்ளைக்குக் கடினமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

விஷயங்களை எளிதாக்குங்கள்:

நீங்கள் துணையை இழந்து இருந்தால், இரண்டாவது நபருடன் வாழ்வில் ஈடுபடுவதற்கு முன்பு, உங்கள் பிள்ளைகள் பெற்றோருக்காக ஏங்காத வகையில், அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்.

குடும்பமாக ஒன்றாக அதிக நேரம் செலவிடுவது, உங்கள் குழந்தை புதிய உறவுடன் எளிதாக ஒன்றுபட உதவும். பிரிந்த பெற்றோரின் நினைவை ஏற்படுத்தும் பழைய இடங்களுக்குச் செல்வதை விட, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அனைவரும் ஒன்றாக செய்யக்கூடிய செயல்களில் அதிகமாக ஈடுபட வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்