இரும்பு பாத்திரங்கள் பராமரிப்பு
நீர் துளிகள் இருந்தால் இரும்பு பாத்திரங்கள் துரு பிடிக்க ஆரம்பிக்கும். அதனால் பாத்திரங்களை கழுவிய பின்பு, கேஸ் அடுப்பு அல்லது மைக்ரோ ஓவனை பயன்படுத்தி நீர் துளிகள் ஆவியாகும் வரை மிதமாக சூடு படுத்த வேண்டும்.;
வாணலி, சட்டி, தோசைக்கல், பணியாரக்கல் என்று பலவிதமான இரும்பு பாத்திரங்களை, பாரம்பரியமாக சமையல் அறையில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வகை பாத்திரங்களில் சமைக்கும் பொழுது அவற்றில் உள்ள இரும்புத் தாதுக்கள் சமையலில் கலந்து உணவில் இரும்புச்சத்தை அதிகப்படுத்தும். அதே சமயம், இரும்பால் ஆன பாத்திரங்களை சுத்தப்படுத்திப் பராமரிப்பது சவாலானது. சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் இரும்பு பாத்திரங்களை நீண்ட காலம் உபயோகப்
படுத்த முடியும். அதற்கான சில குறிப்புகளை இங்கே காணலாம்:
இரும்பு பாத்திரங்களில் சமைத்த பிறகு, அதனை டிஷ்வாஷரை பயன்படுத்தி கழுவக்கூடாது. கைகளால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.
இரும்பு பாத்திரங்களை மிதமான சூடுள்ள நீரில் கழுவ வேண்டும். பாத்திரங்கள் அதிகமாக அடி பிடித்திருந்தால், அவற்றை சூடான நீரில் பத்து
நிமிடம் ஊற வைத்து பின்பு சுத்தம் செய்யலாம்.
இரும்பு ஸ்கிரப்பர் கொண்டு, பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது லிக்விடை பயன்படுத்தி இரும்பு பாத்திரத்தின் மேல் பகுதி, கீழ் பகுதி, நடுப்பகுதி மற்றும் கைப்பிடி போன்ற இடங்களை தேய்க்க வேண்டும்.
ரசாயன சோப் அல்லது லிக்விடை பயன்படுத்த விரும்பாதவர்கள், அரிசி மாவு, சோள மாவு அல்லது இட்லி மாவு கொண்டும் இரும்பு பாத்திரங்களை
சுத்தம் செய்யலாம். எண்ணெய் பிசுக்கு மற்றும் உணவுப் பொருட்களின் வாசனையை போக்குவதற்கு இது உதவும்.
இரும்பு ஸ்கிரப்பர் கொண்டு கழுவிய பின்பு, ஸ்பாஞ்ச் அல்லது சாதாரண ஸ்கிரப்பர் கொண்டு மற்றொரு முறை பாத்திரங்களை சுடுதண்ணீரில் கழுவ வேண்டும். பிறகு டிஷ்யூ அல்லது சுத்தமான துணி கொண்டு முழுவதுமாக துடைக்க வேண்டும்.
நீர் துளிகள் இருந்தால் இரும்பு பாத்திரங்கள் துரு பிடிக்க ஆரம்பிக்கும். அதனால் பாத்திரங்களை கழுவிய பின்பு, கேஸ் அடுப்பு அல்லது மைக்ரோ ஓவனை பயன்படுத்தி நீர் துளிகள் ஆவியாகும் வரை மிதமாக சூடு படுத்த வேண்டும். இரும்பு பாத்திரங்கள் நீண்ட காலம் 'துரு' பிடிக்காமல் இருக்க, இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
பிறகு இரும்பு பாத்திரங்கள் முழுவதும் தேங்காய் எண்ணெய்யை ஒரே சீராகத் தடவ வேண்டும். பின்னர் மிகுதியாக இருக்கும் எண்ணெய்யை துணியால் துடைத்து எடுத்து விட வேண்டும்.
சமையல் முடித்த பிறகு இரும்பு பாத்திரங்களை உடனடியாக கழுவி விட வேண்டும். சிறிதளவு உப்பை, இரும்பு பாத்திரம் முழுவதும் தேய்த்து, பின்பு இரும்பு அல்லாத ஸ்கிரப்பர் கொண்டு கழுவினால் சுத்தம் செய்வது எளிமையாக இருக்கும்.
மேற்கூறிய ஆலோசனைகளை கடைப்பிடித்தால் இரும்பு பாத்திரங்களை துருப்பிடிக்காமல் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.