பாரம்பரிய உணவுகள் விற்பனையில் அசத்தும் ஜனனி

தேன்குழல், வெங்காய முறுக்கு, கார தட்டை, தட்டை, லட்டு, அதிரசம், பால்கோவா, பொட்டுக்கடலை மற்றும் பச்சைப் பயிறு உருண்டை, கோதுமை லட்டு, புளிப்பு முறுக்கு என நமது பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறோம்.;

Update: 2022-06-19 01:30 GMT

தான் பணிபுரிந்த ஐ.டி. துறை வேலையில் இருந்து விலகி, துணிச்சலோடு பாரம்பரிய பலகாரங்கள் தயாரிக்கும் தொழிலை தொடங்கினார் திருச்சியைச் சேர்ந்த ஜனனி. தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் இன்று அதில் வெற்றி பெற்றிருக்கிறார். பாரம்பரிய சுவையோடு அவர் தயாரிக்கும் ஆரோக்கியமான பலகாரங்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது பேட்டி.

''நான், என் கணவர் செந்தில் இருவருமே ஐ.டி பணியாளர்களாக பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினோம். ஆனால் எங்கள் இருவருக்கும் உணவு சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் இருந்தது. முதலில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆன்லைன் மூலம் பலகாரங்கள் விற்பனை செய்யத் தொடங்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

'ஐ.டி. பணியில் இருந்து விலகி இந்தத் தொழிலை தொடங்கப் போகிறோம்' என்றபோது, குடும்பத்தில் எழுந்த எதிர்ப்பை மீறி எங்கள் முடிவில் உறுதியாக நின்றோம். இன்று வெற்றி பெற்றுள்ளோம்.

பாரம்பரிய பலகாரங்களை மிகவும் கவனமாக 'வீட்டு முறை' தயாரிப்பு முறையில், வெண்ணெய் சேர்த்துத் தயாரித்துக் கொடுத்தபோது, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. கொரோனா ஊரடங்கு காலம் எங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

தேன்குழல், வெங்காய முறுக்கு, கார தட்டை, தட்டை, லட்டு, அதிரசம், பால்கோவா, பொட்டுக்கடலை மற்றும் பச்சைப் பயிறு உருண்டை, கோதுமை லட்டு, புளிப்பு முறுக்கு என நமது பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறோம்.

நண்பர்கள், வாடிக்கையாளர்கள் மூலமாகவே அவற்றின் தரம் பலருக்குத் தெரிய ஆரம்பித்தது. தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மூலம் அதிக ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கியது. தற்போது வீட்டு விசேஷங்களுக்குக் கூட எங்களிடம் ஆர்டர் மூலம் பலகாரங்களை வாங்கிச் செல்கின்றனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் விற்பனை செய்து வருகிேறாம். வாடிக்கையாளர்களின் விருப்பப்படி தயார் செய்து கொடுப்பதே எங்களுடைய வெற்றிக்குக் காரணம்.

இதுமட்டுமின்றி ஆரோக்கியத்திற்காக நெல்லிக்காய், பூண்டு பொடி, வேப்பம்பூ பொடி போன்றவற்றையும் தயார் செய்து தருகிறோம். உணவு வகைகள், பலகாரங்கள் என்று நின்றுவிடாமல், ஆரோக்கியமான உணவு முறையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பாரம்பரிய அரிசி வகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தற்போது பலருக்கும் சிறுதானிய வகைகள், பாரம்பரிய நெல் வகைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லை. அவர்களுக்கு உணர்த்தும் வகையில் புதிய புதிய உணவு வகைகளை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி எனும் குறிப்புகளை சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறோம்.

அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுப் பொருட் களைப் பயன்படுத்தி, உணவுகளை தயாரித்து விற்பனை செய்கிறோம். இதற்கு வாடிக்கையாளரிடையே வரவேற்பு கிடைக்கத் தொடங்கியது. தொடங்கிய குறுகிய காலகட்டத்திலேயே எங்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும், வெற்றியும், எங்களை அடுத்த கட்டத்திற்குத் தொடர்ந்து பயணிக்க ஊக்கமளிக்கிறது'' என்கிறார் ஜனனி. 

Tags:    

மேலும் செய்திகள்