குழந்தைகளுக்குப் பண்டிகைகளை அறிமுகம் செய்தல்

இன்று பலர், பணியின் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு கூட்டுக் குடும்பமாக வாழும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. பண்டிகையை சொந்த பந்தங்களோடு சேர்ந்து கொண்டாடுவதன் மூலம், குழந்தைகள் கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

Update: 2022-10-23 01:30 GMT

பாரம்பரியத்தையும், பழங்கால பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கருவியாகப் பண்டிகைகள் இருக்கின்றன.

வாழ்வில் மகிழ்ச்சியையும், அழகிய நினைவுகளையும் தருவது குழந்தைப்பருவம். குறுகியதாக இருந்தாலும், அதன் நினைவுகள் பசுமையானதாக என்றும் மாறாமல் இருக்கும். அதனை இரட்டிப்பாக்கும் விதத்தில் பண்டிகை நாட்கள் அமைகின்றன. பண்டிகைகளை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதன் அவசியம் பற்றி பார்க்கலாம்.

பாரம்பரிய பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ளுதல்:

குழந்தைகள் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் பண்டிகைகள் மூலமாக அறிந்துகொள்கின்றனர். உதாரணமாக, தைத்திருநாளில் உழவர்களின் முக்கியத்துவத்தையும், தேவையையும் அறிந்துகொள்கின்றனர். பாரம்பரிய உடைகள், விளையாட்டுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளையும், பலகாரங்களையும் பற்றி தெரிந்து கொள்கின்றனர்.

ஆடி மாதத்தில் 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பதன் அவசியத்தைக் கூறலாம். வளர்ந்த குழந்தைகளிடம் தொட்டிகளில் நாற்றுகளை மாற்றி வைக்கச் சொல்லலாம். சில விதைகளைக் கொடுத்து அவர்களையே வளர்க்கச் செய்யலாம். அதனுடைய மகத்துவத்தையும் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கலாம்.

அடுத்து வரும் பண்டிகைகளைப் பற்றிக் கூறி, அவற்றுக்கான தயாரிப்பாக வீட்டை சுத்தப்படுத்தும் வேலையில் அவர்களை ஈடுபடுத்தலாம். பல்வேறு பண்டிகைகளைக் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவம் அறிதல்:

இன்று பலர், பணியின் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு கூட்டுக் குடும்பமாக வாழும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. பண்டிகையை சொந்த பந்தங்களோடு சேர்ந்து கொண்டாடுவதன் மூலம், குழந்தைகள் கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள முடியும். உறவினர்களிடம் பழகும் வாய்ப்பும், பகிர்ந்துண்ணும் பழக்கமும் இதன் மூலம் ஏற்படும்.

பண்டிகைக் கால விடுமுறை என்றாலே தொலைக்காட்சி, தொலைபேசி போன்றவற்றில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளை உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுதல், நண்பர்களோடு விளையாடச் செய்தல் போன்றவற்றின் மூலம் அவர்களுடைய நாளை மகிழ்ச்சியாக மாற்றலாம். பண்டிகை தினங்களில் குழந்தைகளை உற்சாகப்படுத்த அவர்களை ஓவியம் வரைதல், பாட்டுப் பாடுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தலாம்.

பண்டிகை தினத்தன்று பரிசுப் பொருட்கள் தருவது வழக்கம். குழந்தைகளை உண்டியலில் சேமிக்கச் செய்து, அதில் இருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் அவர்களின் நண்பர்களுக்கு அல்லது பிடித்தவர்களுக்கு பரிசுகளை வாங்கிக் கொடுக்கச் செய்யலாம். இதன்மூலம் சேமிப்பு பழக்கமும், நட்புணர்வும் குழந்தைகளிடம் அதிகரிக்கும்.

பெற்றோர்கள் இனிமையான நினைவுகளை மட்டுமே தங்கள் குழந்தைகளுக்குத் தர முயற்சி செய்ய வேண்டும். முடிந்தவரை பண்டிகைக் காலங்களில் குழந்தைகளோடு அதிக நேரம் செலவழிப்பது நல்லது.

குழந்தைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவத்தையும், பண்டிகைகளின் சிறப்பையும் கற்றுத்தருவது, அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பதாக அமையும். 

Tags:    

மேலும் செய்திகள்