குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்துவது எப்படி?
தினமும் 3 வேளை தாய்ப்பால் புகட்டுவதை 2 வேளையாகக் குறைக்க வேண்டும். பின்னர் ஒரு முறை மட்டும் கொடுக்கலாம். குழந்தைகளுடன் விளையாடுவது, வெளியில் அழைத்துச் செல்வது போன்ற செயல்கள், பகல் நேரத்தில் அவர்கள் தாய்ப்பாலை மறக்க உதவியாக இருக்கும்.
பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்த உணவாகும். இதில் இருக்கும் சத்துக்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் அவசியமானவை.
தாயின் ஆரோக்கியம் மற்றும் விருப்பத்தைப் பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் புகட்டலாம். இணை உணவுகள் கொடுக்க ஆரம்பித்தப் பின்பு, படிப்படியாக தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தலாம். சில தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்த முடியாமல் சிரமப்படுவார்கள். அவர்களுக்கான சில ஆலோசனைகள் இதோ…
குழந்தைகள் திட உணவுகள் சாப்பிடத் தொடங்கியதும் தானாகவே தாய்ப்பால் குடிப்பதைக் குறைத்துக்கொள்வார்கள். ஒரு வயதுக்குப் பிறகு, ஒரு நாளுக்கு 3 வேளை மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் போதும். சிறிது சிறிதாக தாய்ப்பால் கொடுக்கும் இடைவெளியை அதிகப்படுத்த வேண்டும்.
தினமும் 3 வேளை தாய்ப்பால் புகட்டுவதை 2 வேளையாகக் குறைக்க வேண்டும். பின்னர் ஒரு முறை மட்டும் கொடுக்கலாம். குழந்தைகளுடன் விளையாடுவது, வெளியில் அழைத்துச் செல்வது போன்ற செயல்கள், பகல் நேரத்தில் அவர்கள் தாய்ப்பாலை மறக்க உதவியாக இருக்கும்.
இந்த சமயங்களில் தாய்க்கு மார்பில் பால் கட்டுதல், பால் கசிதல், மார்பகத் தசை இறுகுதல், வலி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதை குணப்படுத்துவதற்கு வீட்டு வைத்தியம் செய்வதற்கு முன்பு மகப்பேறு நல மருத்துவரை அணுகுவது நல்லது.
பால் சுரப்பைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ள வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளும்பொழுது பால் சுரப்பு குறையும்.
குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்தினால், தாய்க்கு பால் சுரப்பு நின்றுவிடும்.
குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் தாய்ப்பாலை மறக்கச் செய்வதுதான் சற்று சிரமமானது. சில குழந்தைகள் இரவில் தாய்ப்பால் குடித்துக் கொண்டே உறங்குவார்கள். கொடுக்கவில்லை என்றால் அழுது அடம் பிடிப்பார்கள். அந்த நேரத்தில் அவர்களை அதட்டுவதும், அடிப்பதும் கூடாது. அது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும்.
மெல்லிய குரலில் கதை சொல்லியோ அல்லது தாலாட்டுப் பாடியோ குழந்தையை மென்மையாக வருடி தூங்க வைக்க வேண்டும். குழந்தை தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக, எளிமையான உணவுகளை கொடுக்க வேண்டும்.
தந்தையின் அருகில் குழந்தையை உறங்க வைப்பது சிறந்தது. நள்ளிரவில் குழந்தை பாலுக்கு அழும்போது, தந்தையே குழந்தையைத் தட்டிக் கொடுத்து, தூங்க வைக்கலாம். இரவு நேரத்தில் தாய்ப்பாலை நிறுத்தியதும், இரண்டு நாளுக்கு ஒருமுறை மட்டும் தாய்ப்பால் கொடுக்கலாம். இந்த இரண்டு நாள் இடைவெளியில் குழந்தை தாய்ப்பாலுக்கு அழவில்லை என்றால், தாய்ப்பால் கொடுப்பதை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும். தாய்ப்பாலுக்கு மாற்றாக மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு புட்டிப்பால் கொடுக்கலாம்.