உடற்பயிற்சி செய்வதற்கு கணவரை ஊக்கப்படுத்துவது எப்படி?
உங்கள் கணவர் மட்டும் தனியாக உடற்பயிற்சி செய்யும்போது சலிப்பு ஏற்படலாம். நீங்களும், குழந்தைகளும் அவரோடு சேர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அந்த கலகலப்பான தருணத்தில் இருந்து விடுபடத் தோன்றாது. இதனால் தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபடுவார்.;
இன்றைய டிஜிட்டல் உலகில் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பெரும்பாலான வேலைகளை செய்ய முடியும் என்பதால், உடல் உழைப்பு பெரிதும் குறைந்து விட்டது. இதனால் சாப்பிடும் உணவில் உள்ள கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது. இதன் விளைவாக உடல் பருமன், இதய நோய் போன்ற பல பிரச்சினைகள் உண்டாகின்றன. இதில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் ஆண்களே.
பல பெண்களுக்கு வீட்டு வேலைகளே உடற்பயிற்சியாக மாறுகின்றன. ஆனால் அலுவலகம் செல்லும் மற்றும் தொழில் செய்யும் ஆண்களுக்கு உடல் உழைப்பு பெரிதாக இல்லை. அதுமட்டுமில்லாமல், அலுவலக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் அடிக்கடி வெளியில் சாப்பிடுவது, அளவுக்கு மீறி நொறுக்குத்தீனிகள் உட்கொள்வது, குளிர்பானங்கள் குடிப்பது, சிலருக்கு புகை மற்றும் மதுப் பழக்கம் இருப்பது போன்றவற்றால் ஆண்களின் உடல் எடை வெகுவாக அதிகரிக்கிறது.
எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும், நேரமில்லாத காரணத்தால் அதற்கான முயற்சிகளை பலர் எடுப்பது இல்லை. கணவர் உடல் எடையைக் குறைப்பதற்கு மனைவி உதவி செய்யலாம், ஊக்கப்படுத்தலாம். அதற்கான சில வழிமுறைகள் இங்கே…
உங்கள் கணவர் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால், அவரை அழைத்துக்கொண்டு அவருக்கு பிடித்த விஷயங்களைப் பேசியபடியே சிறு நடைப்பயிற்சி செல்லுங்கள். அவ்வப்போது அவர் எழுந்து நடப்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து செயல்படுங்கள்.
உங்களுக்கும் கணவருக்கும் இடையே, யார் முதலில் உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றி அமைப்பது என்று போட்டி வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், அவர் பார்வையில் படுமாறு செய்யுங்கள். அவர் முயற்சி செய்யும்போது அதைப் பாராட்டி ஊக்கப்படுத்துங்கள்.
உங்கள் கணவர் சற்றே சோம்பலுடன் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், பயிற்சிகளைத் தொடர அவரை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் வழிகாட்டுதலால் அவரும் உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுவார்.
நண்பர்கள் அல்லது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன், குழுவாக சேர்ந்து உடற்பயிற்சி செய்வது விளையாடுவது போன்றவற்றில் உங்கள் கணவரை ஈடுபடச் செய்யுங்கள். இதன் மூலம் உடல் மட்டுமில்லாமல், மன ஆரோக்கியமும் மேம்படும்.
உங்கள் கணவர் மட்டும் தனியாக உடற்பயிற்சி செய்யும்போது சலிப்பு ஏற்படலாம். நீங்களும், குழந்தைகளும் அவரோடு சேர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டால், அந்த கலகலப்பான தருணத்தில் இருந்து விடுபடத் தோன்றாது. இதனால் தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபடுவார்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் அவருடைய தோற்றத்தில் தெரியும் சிறு சிறு மாற்றங்களையும் கொண்டாடி உற்சாகப்படுத்துங்கள். அடிக்கடி அவருக்குப் பிடித்த ஆரோக்கியமான உணவுகளை தயாரித்துக்கொடுங்கள். ஊக்கமும், பாராட்டுக்களும் ஒருவரை தொடர்ந்து செயல்பட செய்யும் மருந்துகள். எனவே அவரை உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள்.
உடற்பயிற்சி மட்டுமில்லாமல், ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் பழக்கவழக்கங்கள், போதுமான தூக்கம் போன்றவையும் உடல் எடை குறைப்புக்கு முக்கியமானது. எனவே அவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்.