நட்பு நீடிக்க நீங்கள் செய்ய வேண்டியவை
திருமணமான பெண்களின் நட்பு, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாட்டை உண்டாக்குவதும் உண்டு. அதை சுமுகமாக கையாள்வது அவசியம்.;
இளம் வயதில் பெண்களுக்கு நிறைய தோழிகள் இருப்பார்கள். ஆனால் திருமணம் நடந்து கணவர், குழந்தைகள் என்று அவர்களுக்கான குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்போது, அந்த நட்பு வட்டம் தானாகவே சுருங்கி விடுகிறது. அதைத் தாண்டி ஆரோக்கியமான நட்பு நீடிப்பதற்கு, நாம் என்ன செய்ய வேண்டும் என்று இங்கே பார்ப்போம்.
பல பெண்கள், தோழிகளிடம் பேசும்போது தங்கள் அன்றாட செயல்பாடுகள் மட்டுமில்லாமல், மற்றவர்களின் குடும்பப் பிரச்சினைகளையும் பகிர்ந்துகொள்வார்கள். இத்தகைய அணுகுமுறை, 'இதேபோல் நம் குடும்ப விஷயமும் பேசு பொருளாகும்' என்ற எண்ணத்தை உண்டாக்கி, நல்ல நட்பிலும் சந்தேகத்தை வர வைக்கும்.
தோழிகளிடம் விவாதிக்கும்போது நேர்மறை சிந்தனையோடு மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் நட்பில் நம்பிக்கை நிலவும். 'தோழி, நம் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கொடுப்பாள்' என்ற வலுவான எண்ணம் பிறக்கும்.
முடிந்தவரை நட்புக்குள் கடன் கொடுப்பது, வாங்குவது போன்றவற்றை தவிர்க்கலாம். பணம் சார்ந்த பிரச்சினைகள் நல்ல நட்பையும் பிரித்து விடும்.
திருமணமான பெண்களின் நட்பு, கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாட்டை உண்டாக்குவதும் உண்டு. அதை சுமுகமாக கையாள்வது அவசியம்.
எந்த வயது பெண்களாக இருந்தாலும், நட்பில் சிறிய விஷயங்களை பெரிதாக்கி சண்டையிடக் கூடாது. பொறுமையாக அணுகினால் எத்தகைய பிரச்சினையையும் தீர்க்க முடியும். புரிதலின்மையே இளம் பெண்கள் நட்பில் விரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதுபோல, நட்பில் அளவு மிஞ்சக்கூடாது. இக்கால நட்பில், தங்கள் தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தோழிகளிடம் கூறி விடுகிறார்கள். அந்த தோழி திடீரென எதிரியாகி, அந்த ரகசியங்களை வெளியில் கூறும்போது மனம் வேதனைப்படுகிறார்கள். உயிருக்கு உயிரான தோழியாக இருந்தாலும், உங்களுடைய அந்தரங்க விஷயங்களை தோழிகளிடம் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கலாம்.
தேவைப்படும் நேரத்தில், தகுந்த ஆலோசனை கூறி வழி நடத்திச் செல்வதும் தோழியின் கடமையாகும். உங்கள் தோழிக்கு நீங்கள் செய்யும் நன்மை தெரியவில்லை, அவர்கள் உணரவில்லை என்றாலும் கடமையை தொடர்ந்து செய்வதே நட்பின் பலம்.
நட்பில் மொழி, நிறம் பார்க்கக் கூடாது. உள்ளத்தை மட்டுமே பார்க்க வேண்டும். வேற்று மொழி தோழிகளுடன் பழகும்போது, நமது உறவினர்கள் வந்தாலும் நம் மொழியில் பேசி தோழிகளை சங்கடப்படுத்தக்கூடாது. அது 'நம்மைப் பற்றிதான் பேசுகிறார்களா?' என்ற எண்ணத்தை உருவாக்கும்.
நட்பில் சிறு விரிசல் வந்தாலும், உடனே பேசித் தீர்க்க வேண்டும். தீய குணங்கள் தோழியிடம் இருந்தால், அதில் உள்ள கெடுதல்களைக்கூறி படிப்படியாக தோழியை நல்வழிப்படுத்த வேண்டும்.
தோழியின் உயர் குணங்களை, நல்ல செயல்களை பாராட்டலாம். புகழ்ச்சியால் யார் மனதிலும் நல்ல இடம் பெற்றுவிட முடியும். இதனை நட்பில் மறந்துவிடக்கூடாது. அதேநேரம் வஞ்சகப் புகழ்ச்சி கூடாது. உள்ளதை உள்ளபடி கூறி, உள்ளம் பூரிப்பதே உண்மையான நட்பை உறுதியாக்கும்.