பருவ நிலை மாற்றத்துக்கேற்ற ஆரோக்கிய வழிகள்
மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சினையால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளுக்கு, நீராவி பிடிக்கும் முறை சிறந்த நிவாரணம் அளிக்கும். நாசிப் பாதைகளை சுத்தம் செய்ய நீராவியை மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளிழுப்பது நல்லது.;
கோடை, மழை, குளிர் காலம் என பருவங்கள் மாறும்போது, சுற்றுச்சூழலிலும் மாற்றங்கள் உண்டாகிறது. இதனால் உடல் நலனில் பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமானது. ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வீட்டிலேயே சில நலவாழ்வு நடை
முறைகளைப் பின்பற்ற வேண்டும். இவை நம்மை நோய் மற்றும் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். அதற்கான சில வழிகள்:
மஞ்சள் பால்:
சளி, இருமல், காய்ச்சல் போன்ற பலவற்றுக்கும் பயனளிக்கும் சிறந்த நிவாரணி மஞ்சள் பால். நெஞ்செரிச்சல், தலைவலி, தொண்டைப் புண் ஆகியவை குணமாக இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு மஞ்சள் பால் குடிக்கலாம். இதில் உள்ள ஆன்டிபயாடிக் மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வேப்பிலை டீ:
வேப்ப இலைகளில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. அவை மழையால் ஏற்படும் காய்ச்சலுக்குத் தகுந்த நிவாரணி. இந்த டீயை எந்தப் பருவ காலத்திலும் பருகலாம். மழைக்காலம் மற்றும் பனிக்கால நோய் அறிகுறிகளை குணப்படுத்தவும், தடுக்கவும் வேப்பிலை டீ உதவுகிறது. இரண்டு அல்லது மூன்று வேப்ப இலைகளை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து குடிக்கலாம். வேப்பம் பூவைப் பயன்படுத்தியும், இந்தத் தேநீரைத் தயாரிக்கலாம். வேம்பு கசப்பாக இருக்கும் என்பதால், சிறிதளவு தேன் கலந்து குடிக்கலாம்.
நீராவி பிடித்தல்:
மழைக்காலத்தில் சளி, இருமல் பிரச்சினையால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளுக்கு, நீராவி பிடிக்கும் முறை சிறந்த நிவாரணம் அளிக்கும். நாசிப் பாதைகளை சுத்தம் செய்ய நீராவியை மூக்கு மற்றும் வாய் வழியாக உள்ளிழுப்பது நல்லது.
கொதிக்கவைத்த தண்ணீரில் டீட்ரீ எண்ணெய், கிராம்பு எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 2 அல்லது 3 துளிகள் சேர்த்து நீராவி பிடிக்கலாம். இது நோய்க் கிருமிகளை வெளியேற்றும்.
சமச்சீர் உணவு:
அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும் சமச்சீர் உணவு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க அவசியமானது. பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம். இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். நோய் வராமலும் பாதுகாக்கும். வைட்டமின் 'சி', அடிக்கடி ஏற்படும் நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. கோடை காலத்தில் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்வது சிறந்தது. இவை நோய்களைத் தடுக்க உதவுகின்றன.
மழை மற்றும் பனிக்காலத்தில், சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். சூடான காய்கறி சூப்புக்கு முக்கியத்துவம் தரலாம். பாக்டீரியா மற்றும் பிற நோய்த் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதால், குளிர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
அதிமதுரம்:
சளி மற்றும் தொண்டைப் புண் போன்ற அறிகுறிகளைக் குணப்படுத்த அதிமதுரம் உகந்தது. அதிமதுர வேரை நசுக்கி, 2 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயம் தயாரித்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.