சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 949 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதன் முறையாக பார்சலில் கடத்தி வந்த தங்கமும் சிக்கியது.;

Update: 2022-08-22 21:22 GMT

சென்னை விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் 3 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 310 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதே விமானத்தில் இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்து இருந்த ரூ.12 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 284 கிராம் தங்க கட்டியையும் கைப்பற்றினார்கள்.

தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த வாலிபரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்த போது, அவரது உள்ளாடையில் மறைத்து வைத்து இருந்த ரூ.17 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள 395 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.24 லட்சத்து 72 ஆயிரம் மதிப்புள்ள 540 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

சீனா, இங்கிலாந்தில் இருந்து பார்சல்

அதேபோல் சீனா மற்றும் இங்கிலாந்து நாட்டில் இருந்து 3 பார்சல்கள் சென்னை விமான நிலைய பன்னாட்டு தபால் பிரிவுக்குவந்தன. சீனாவில் இருந்து வந்த 2 பார்சல்கள் தென்காசிக்கு செல்ல இருந்தது. பார்சலில் அலங்கார பொருட்கள் என எழுதபட்டு இருந்தது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த பார்சலிலும் அலங்கார பொருட்கள் என குறிப்பிட்டு இருந்தது. அந்த 3 பார்சல்கள் மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அதில் குறிப்பிட்டு இருந்த முகவரியில் சென்று விசாரித்தனர். அதில் அவை போலியானது என தெரியவந்தது.

தங்க கட்டிகள்

இதையடுத்து 3 பார்சல்களையும் பிரித்து பார்த்தபோது அதில் 31 தங்க கட்டிகள் இருந்தன. ரூ.22 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள 420 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றினர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் ஒரே நாளில் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 949 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 இலங்கை வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தபால் மூலம் பார்சலில் வந்த தங்கத்தை அனுப்பியது யார்?, யாருக்காக அனுப்பி வைத்தனர்? எனவும் விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் சீனா மற்றும் இங்கிலாந்தில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டது இதுவே முதல் முறையாகும். அதேபோல் தபால் மூலம் இதுவரை கஞ்சா, போதை மாத்திரைகள்தான் கடத்தி வரப்பட்டு உள்ளது. ஆனால் பார்சலில் தங்க கட்டிகளை கடத்தி வந்ததும் இதுவே முதல் முறை என சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்