மின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்
‘எனர்ஜி சேவிங்’ மின்விசிறிகள், பலவிதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கின்றன. எனவே வீட்டின் அறைகளுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து மேலும் அழகு சேர்க்கலாம்.;
நெருக்கடி நிறைந்த குடியிருப்புப் பகுதிகளில் சீரான காற்றோட்டத்தைப் பெறுவதற்கு மின்விசிறிகள் அவசியமானவை. பல வீடுகளில் நாள் முழுவதும் இவை இயங்கிக்கொண்டே இருக்கும். இதனால் மின்சாரப் பயன்பாடும், கட்டணமும் அதிகரிக்கும்.
இதைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஆற்றலைக் குறைவாகப் பயன்படுத்தும் 'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகள் தற்போது கிடைக்கின்றன. இவற்றில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப மோட்டார், குறைந்த ஆற்றலைப் பயன்படுத்தி 50 சதவீதம் வரை மின் கட்டணத்தைக் குறைக்கும். இவற்றின் பயன்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.
சீரான காற்று விநியோகம்:
'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகள் அவற்றின் ஆற்றல் திறன் காரணமாக, குறைந்த மின் நுகர்வில் அதிக மற்றும் சீரான காற்றை கொடுக்கக்கூடியவை. இந்த மின்விசிறிகள் சத்தமில்லாமல் இயங்குபவை. இவை கூரையுடன் இணைக்கப்பட்டு காற்றைச் சுழற்றி கீழே அழுத்தித் தள்ளுவதன் மூலம் அறையைக் குளிர்விக்கும்.
மின் கட்டணம் குறைப்பு:
வழக்கமான மின்விசிறிகளில் ஆற்றல் திறனும், செயல்பாடும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக அவை அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும். இதனால் மின் கட்டணம் 25 சதவீதம் வரை உயரும். 'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகளின் அதிக ஆற்றல் திறனால் 50 சதவீதம் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும்.
வடிவமைப்பு:
'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகள், பலவிதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கின்றன. எனவே வீட்டின் அறைகளுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து மேலும் அழகு சேர்க்கலாம்.
நீடித்த உழைப்பு:
ஆற்றல்-திறனுள்ள 'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகள் தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் காரணமாக, மாற்று மின்னோட்டம் மற்றும் நேரடி மின்னோட்டம் ஆகிய இரண்டிலும் இயங்கக் கூடியவை. இதனால் இவை பல ஆண்டுகள் நிலைப்புத் தன்மையோடு இயங்கும்.
வெளிச்சம்:
'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகளில் சி.எப்.எல் பல்புகள் பொருத்தப்பட்டு இருப்பதால், மையப்பகுதியில் இருந்து அறைக்கு போதுமான வெளிச்சத்தை கொடுக்கும். இதனால் அறையில் அதிகமான மின் விளக்குகள் உபயோகிப்பதைத் தவிர்க்க முடியும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
'எனர்ஜி சேவிங்' மின்விசிறிகள் அறையில் இருக்கும் காற்றை குளிர்விக்கக் கூடியவை. இவை தீமை தரும் வாயுக்களை வெளியேற்றுவதில்லை. எனவே வீட்டில் ஏ.சி. பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் மாசு அடைவதைத் தடுக்க முடியும்.