மின்விசிறி, மின்விளக்குகள் பராமரிப்பு
மின்விசிறியைக் கழற்றி இறக்கைகளைத் தனியாகப் பிரித்து சுத்தம் செய்வதே சிறந்தது. இவ்வாறு பிரித்து சுத்தம் செய்யும்போது மின்விசிறியில் பழுது இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.;
வீட்டு பராமரிப்பில் நமக்கு சவாலாகவும், தினசரி சுத்தம் செய்ய சவுகரியமில்லாமலும் இருப்பது மின் விசிறிகள், மின் விளக்குகள் போன்றவைதான். இவற்றை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறையே சுத்தம் செய்வோம். அப்போதும் ஈரத்துணியைக் கொண்டு சுத்தம் செய்துவிட்டு நகர்ந்து விடுவதையே பலரும் செய்கிறார்கள். இது அந்தப் பொருட்களை தூசியின்றி காட்டுமே தவிர சுத்தமாகவும், பளபளப்புடனும் காட்டாது. இவற்றை சுத்தம் செய்ய உதவும் சில யுக்திகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
மின்விளக்கு
டியூப் லைட், சிறிய விடிவிளக்கு, பல்புகள் என அனைத்து வகையான மின்விளக்குகளையும் சுத்தம் செய்யும் முன்பு, அவற்றை குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இதனால் மின்விளக்குகள் சூடாக இல்லாமல், சுத்தம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மின்விளக்கை சோப்பு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வது அதன் பளபளப்பைக் குறைப்பதுடன், விளக்கின் வெளிப்பகுதியை மங்கலாக்கும். சுத்தம் செய்த பின்பு கிடைக்கும் வெளிச்சத்தின் அளவு குறைவாக இருக்கும்.
எனவே முதலில் மின்விளக்குகளின் மீதுள்ள அழுக்குகளை நீக்க வேண்டும். பின்பு, சிறிதளவு கிளீனிங் திரவத்தை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து அதில் பருத்தி துணியை நனைத்து மின்
விளக்கை துடைக்கலாம். மின்விளக்குகளை சுத்தம் செய்யும்போது 'சாப்ட் லைன்பிரி கிளவுஸ்' பயன்படுத்துவது சிறந்தது. இது மின்விளக்கில் நம் கைரேகை பதியாமல் தடுப்பதுடன், சுத்தம் செய்யப் பயன்படுத்தும் பொருட்களால் கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் காக்கும்.
மின்விசிறி
மின்விசிறியைக் கழற்றி இறக்கைகளைத் தனியாகப் பிரித்து சுத்தம் செய்வதே சிறந்தது. இவ்வாறு பிரித்து சுத்தம் செய்யும்போது மின்விசிறியில் பழுது இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
முதலில் மின்விசிறியின் மீதுள்ள அழுக்கு மற்றும் தூசுக்களை பருத்தி துணி அல்லது பழைய தலையணை உறை கொண்டு சுத்தம் செய்யவும்.
பின்னர், கிளீனிங் லிக்விட், வினிகர் மற்றும் தண்ணீர் மூன்றையும் சம அளவு கலந்து கொண்டு, மைக்ரோ பைபர் துணியை இக்கலவையில் நனைத்து மின்விசிறியின் அனைத்து பகுதிகளையும்
சுத்தம் செய்யவும். சில நிமிடங்கள் கழித்து மின்விசிறியை இணைக்கவும் அல்லது இயக்கவும்.
ஒயர்கள்
ஒயர்கள் சுத்தம் செய்வதற்கு முன்னர் மின் இணைப்பு நிறுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்யவும். மின்விளக்கு, மின்விசிறி, தொலைக்காட்சி, கணினி அல்லது சார்ஜர் என அனைத்து மின்சாதனப் பொருட்களுக்குப் பயன்படுத்தும் ஒயர்களை வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். பேக்கிங் சோடாவை தண்ணீருடன் கலந்தோ அல்லது இளஞ்சூடான தண்ணீரில் வினிகர் மற்றும் லிக்விட் சோப் கலந்தோ பயன்படுத்தலாம். உலர்ந்த துணி அல்லது ஸ்பாஞ்ச் கொண்டு ஒயர்களை சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்த பின்பு உலர்ந்த மைக்ரோ பைபர் துணி கொண்டு ஒயர்களை தேய்க்கவும். இது ஒயரில் பாதிப்பு இருப்பதை கண்டறிய உதவும். ஒயரை புதிது போல பளபளப்புடன் காட்டும்.