பிரசவித்த பெண்களுக்கு உடற்பயிற்சி அவசியம் - ரோசி

திருமணத்திற்குப் பிறகு உடற்பயிற்சிகள் குறித்து அவருடன் நடக்கும் கலந்துரையாடல்களால் ஈர்க்கப்பட்டு, முறைப்படி உடற்பயிற்சியாளருக்கான படிப்பை முடித்து, அவருடன் ஜிம்மில் பயிற்சியாளராகப் பயணிக்கத் தொடங்கினேன்.;

Update:2022-09-11 07:00 IST

கப்பேறுக்குப் பின்பு பெண்களின் மார்பளவு முதல் இடுப்பு சுற்றளவு வரை அதிகரித்து, அவர்களது தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். இதுவே பல இளம் தாய்மார்களை கவலையில் ஆழ்த்துகிறது. பிரசவத்துக்குப் பின்னர் உடல் எடையில்

கவனம் செலுத்தினாலும், உடற்பயிற்சிகளை எப்போது, எப்படித் தொடங்கவேண்டும்? என்ற வழிகாட்டுதல் இல்லாமல் தவிப்பவர்களுக்கு தகுந்த ஆலோசனை அளித்து, பழைய உடல் அழகைப் பெற வழிகாட்டுகிறார், உடற்பயிற்சியாளர் ரோசி ரவிசங்கர். கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கான உடற்பயிற்சி வல்லுனரான இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் பிட்னஸ் வகுப்பில் மட்டும் பிரசவத்துக்குப் பிறகு எடை அதிகரித்த 900 பெண்களுக்குப் பயிற்சியளித்துள்ளார்.

இனி அவருடன் பேசுவோம்.

உடற்பயிற்சி மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

சிறுவயதில் இருந்தே உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவேன். தினமும் உடற்பயிற்சி செய்வது, ஜிம்முக்கு செல்வது என் அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்று. பிட்னஸ் குறித்த தகவல்களைத் தொடர்ச்சியாகக் கவனித்து வந்தேன். அந்த ஆர்வத்தில் எம்.பி.ஏ., முடித்த பின்னர், உடற்பயிற்சி தொடர்பான படிப்புகளை படித்தேன். எனது கணவரும் பிட்னஸ் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். 12 ஆண்டுகளாக சொந்தமாக உடற்பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.

திருமணத்திற்குப் பிறகு உடற்பயிற்சிகள் குறித்து அவருடன் நடக்கும் கலந்துரையாடல்களால் ஈர்க்கப்பட்டு, முறைப்படி உடற்பயிற்சியாளருக்கான படிப்பை முடித்து, அவருடன் ஜிம்மில் பயிற்சியாளராகப் பயணிக்கத் தொடங்கினேன். அவரது தொடர்ச்சியான ஆதரவால் 2 வயது கைக்குழந்தையுடன் வகுப்புகளையும் எடுக்க முடிகிறது. என்னாலும் உடற்பயிற்சி செய்ய முடிகிறது.

கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கான உடற்பயிற்சியாளராக ஆனது குறித்து சொல்லுங்கள்?

என்னுடைய கர்ப்பக் காலம் முழுவதும் நான் உடற்பயிற்சிகளை செய்து வந்தேன். திருமணத்திற்கு முன்பே பிட்னஸ் தொடர்பான படிப்புகளை முடித்திருந்ததால், கர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளுக்கான கல்வியையும் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. கர்ப்பமாக இருந்தபோதே மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் மேற்கொள்ளும் உடற்பயிற்சிக்கென பிரத்தியேக படிப்பை முடித்தேன். குழந்தை பிறந்த 7-வது நாளில் இருந்தே மீண்டும் பயிற்சிகளை செய்யத் தொடங்கிவிட்டேன்.

கொரோனா பரவலுக்கு இடையில், கர்ப்பமாக இருந்தது என்னை கவலையில் ஆழ்த்தியது. அந்தச் சமயத்தில் உடற்பயிற்சி செய்தது எனக்கு நல்லதொரு உணர்வை அளித்தது. அப்போது, 'நான் உடற்பயிற்சி செய்வதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டால், பிறருக்கும் உத்வேகம் அளிக்கும்' என்று என் கணவர் கூறினார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடத் தொடங்கிய பின்னர் எண்ணற்ற பெண்கள், கர்ப்பக் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா? பிரசவத்திற்கு பிறகு உடல் எடையைக் குறைக்க முடியுமா? எங்களுக்கும் உடற்பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்க முடியுமா? என தினமும் குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். ஆனால், கொரோனா காலகட்டம் என்பதால் என்னால் நேரடி வகுப்புகளை எடுக்க முடியவில்லை. இணைய வழியில் வகுப்புகளை எடுக்கத் தொடங்கினேன்.

மகப்பேறுக்கு முன்னும், பின்னும் உடற்பயிற்சி மேற்கொள்வதன் அவசியம் என்ன?

உடற்பயிற்சி என்பது உடல் மற்றும் உள்ளத்தைசார்ந்தது. கர்ப்பக் காலத்தில் உடற்பயிற்சி செய்வது பிரசவத்தன்று ஏற்படும் வலியை எதிர்கொள்ளும் மனஉறுதியை தருவது மட்டுமில்லாமல், எளிதாக பிரசவம் நடக்கவும் உதவும். கர்ப்பக் காலத்தில் தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்வதன் பலன் பிரசவ தினத்தன்று கிடைக்கும்.

அதுபோலவே, மகப்பேறுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்வது உடல் எடைக் குறைப்புக்காக மட்டுமல்ல. பிரசவத்துக்குப் பிறகு ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மனஅழுத்தம் கண்டு கொள்ளப்படாத ஒன்றாகவே இருக்கிறது. கர்ப்பக் காலத்தில் பெண்ணுக்குக் கிடைக்கும் ஆதரவும், அரவணைப்பும் மகப்பேறுக்குப் பின்னர் கிடைப்பதில்லை. உலகிற்குப் புதிதாக வந்த உயிரின் மீதே அனைவரது பார்வையும் திரும்பும். அது இயல்பான ஒன்றாகவே இருக்கும் சூழலில், பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை அவளே எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள்.

அத்துடன் உடலளவில் ஏற்பட்ட மாற்றம் கூடுதல் மனக்கவலையை அளிக்கும். பழைய ஆடைகளை மீண்டும் அணிய முடியாமல் தவிப்பது மற்றவர்களுக்கு சாதாரண நிகழ்வாகத் தோன்றினாலும், சம்பந்தப்பட்டப் பெண்ணுக்கு மனதளவில் அது அழுத்தத்தை ஏற்படுத்தும். அதில் இருந்து விடுபட வைப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்காற்றும். குழந்தை பிறந்த

பிறகு தங்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் நேரம் ஒதுக்குவதை பெண்கள் மறந்து விடுகின்றாள். தங்களுக்காக நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.

மகப்பேறு கால உடற்பயிற்சி பற்றிய தவறான கருத்துகளை எப்படிக் கையாளுகிறீர்கள்?

கர்ப்பக் காலத்தில் உடற்பயிற்சி செய்தால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்ற பயம் பலருக்கும் உள்ளது. அது தவறு. சீரான உடல் நிலையில் இருக்கும் கர்ப்பிணிகள் அனைவரும் உடற்பயிற்சி செய்யலாம். அதற்கு முன்பு தங்கள் ஆரோக்கியம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்.

அன்றாட வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், இயல்பாக நடக்கும் பல பயிற்சிகளை நாம் தவறவிட்டுள்ளோம். அத்தகைய பயிற்சி உடலுக்கு பல நன்மைகளைத் தரும். உதாரணத்துக்கு, 'புல் ஸ்குவாட்' என்ற பயிற்சியை கர்ப்பிணிகளுக்கு சொல்லித் தருகிறோம். கழிவறையில் இந்திய முறைப்படி அமரும் நிலை தான் அது. ஆனால் பலரும் வெஸ்டர்ன் கழிவறைகளைப் பயன்படுத்துவதால் இதைப் பயிற்சியாக செய்ய வேண்டி உள்ளது.

குழந்தை பிறந்த பிறகு வயிற்றை இறுக்கிக் கட்டாததால் தொப்பை போட்டுள்ளது என்பார்கள். ஆனால், கர்ப்ப காலத்தில் வயிறு விரிவடையும்போது, இரு பக்கங்களிலும் இணைந்திருக்கும் இணைப்பு திசு மெலிந்து விரிவடைந்து, கருவில் வளரும் குழந்தைக்கு இடமளிக்கிறது.

இது சிலருக்கு இயல்பாகவே மாறலாம். இதைச் சரிசெய்ய முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

என்னிடம் பயிற்சி எடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் பிட்னஸ் வெற்றியையும் கேட்பதில் எனக்கு அளவற்ற சந்தோஷம் கிடைக்கும். அவர்களது வாழ்க்கையில், உடல் ஆரோக்கியத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளேன் என்பது என்னுடைய மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். 

Tags:    

மேலும் செய்திகள்