பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் நாட்டு நாய்கள்

நாட்டு நாய்களைப் பார்த்து பெண்கள் அச்சப்படத் தேவையில்லை. அவற்றை சுலபமாக பழக்கி நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.;

Update: 2022-10-09 01:30 GMT

"சூழ்நிலை காரணமாக தனியாக வசிக்கும் பெண்களுக்கு நாட்டு நாய்கள் சிறந்த பாதுகாப்பை வழங்கும். தோழமை உணர்வுடன் அவை பழகுவதால் தனிமையின் காரணமாக உண்டாகும் மனஅழுத்தம் நீங்கும்" என்கிறார் ரம்யா. திருச்சியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர், நாட்டு நாய்களை வளர்ப்பதிலும், பாதுகாப்பதிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து ரம்யா கூறியது…

"வாழ்க்கையில் நான் சந்தித்த சில கசப்பான அனுபவங்கள் காரணமாக மனஅழுத்தத்தில் இருந்தபோது, எனது கவனம் நாய்கள் மீது திரும்பியது. உயர் ரக நாய்களை விட எனக்கு நாட்டு நாய்கள் மிகவும் பிடித்தது. ஒரு பிஸ்கட் கொடுத்தால், அந்த நன்றியை மறக்காமல் எனது பின்னால் வாலை ஆட்டிக்கொண்டே வரும் அந்த அன்பு அலாதியானது.

அதனால் தினமும் தெருநாய்களுக்கு உணவு அளிக்கிறேன். காலை மாலை இரு வேளையும் பால், பிஸ்கெட் கொடுப்பேன். வாரம் ஒரு நாள் முட்டை கலந்த சாதம் தயாரித்துக் கொடுக்கிறேன். இவ்வாறு 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணியை தனியாளாக செய்து வருகிறேன்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நாய்கள் உணவுக்காக மிகவும் சிரமப்பட்டன. அப்போது என்னால் முடிந்தவரை அவற்றுக்கு உணவு கொடுத்து வந்தேன்.

என்னுடைய சொந்த முயற்சியில் சென்னை மற்றும் திருச்சியில் 25-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் நாய்களுக்காக நடத்தி இருக்கிறேன். எப்பொழுது தடுப்பூசி போட வேண்டும், என்ன உணவுகள் கொடுக்க வேண்டும், நாய்களை எவ்வாறு பழக்க வேண்டும், எப்படி பராமரிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

நாட்டு நாய்களைப் பார்த்து பெண்கள் அச்சப்படத் தேவையில்லை. அவற்றை சுலபமாக பழக்கி நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

வெளிநாட்டு நாய்களை விட, நாட்டு நாய்களைப் பராமரிப்பதற்கான செலவு குறைவு. இட வசதி இருப்பவர்கள் வீட்டுக்கு ஒரு நாய் வளர்க்கலாம். அழிந்து வரும் நாட்டு நாய் இனத்தைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

மனிதர்களுக்கு இருப்பது போல் ஒவ்வொரு ஊரிலும் நாய்களுக்கான பூங்காக்கள் அமைக்க வேண்டும். நாய் கண்காட்சிகள் நடத்தி அவற்றின் திறமையை ஊக்குவிக்க வேண்டும். நாய்களுக்கு மாதம் தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும். நாய் வளர்ப்பவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை கொடுக்க வேண்டும். இதுவே எனது ஆசையாகும்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்