30 வயதுக்கு மேல் எடை குறைப்பில் ஈடுபடும் பெண்களுக்கான ஆலோசனைகள்

எடையைக் குறைக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கியமான குறிப்பு, குறைக்கும் எடை நிலையானதாகவும், சீரானதாகவும் இருக்கவேண்டும்.;

Update:2022-06-19 07:00 IST

ரோக்கியமாக வாழ்வதற்கு உடலையும், மனதையும் சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். வாழ்க்கை முறையினாலோ, உணவு பழக்கவழக்கங்களினாலோ, 30 வயதை அடையும் பெண்களில் பலர் உடல் எடை அதிகரித்து பருமனாகி விடுகின்றனர். பின்பு சுதாரித்துக்கொண்டு எடையைக் குறைக்கும் ஆர்வத்தில் தவறான வழிகளைத் தேர்ந்தெடுத்து ஆரோக்கியத்தை இழக்கின்றனர்.

உடல் அமைப்பு, உணவுமுறை, வயது போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொருவரின் உடலும் வெவ்வேறு விதமாக செயலாற்றும். எனவே எடையைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வதற்கு முன்பு, நம் உடலை பற்றி தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும்.

30 வயதில் இருக்கும் பெண்கள், உடல் எடையைக் குறைக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய சில குறிப்புகள் இதோ...

நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே நம்மை நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும். உங்கள் எடை குறைப்பின் நோக்கம் ஆரோக்கியமான வாழ்விற்கான பயணமாக இருக்க வேண்டும். கிலோ கணக்கில் எடையைக் குறைக்க வேண்டும் என்பதைக்காட்டிலும், நீங்கள் இப்போது இருக்கும் நிலையை விட அதிகமாக ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உங்கள் எடைக்குறைப்பு பயணத்தைத் தொடங்க வேண்டும்.

எடையைக் குறைக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கியமான குறிப்பு, குறைக்கும் எடை நிலையானதாகவும், சீரானதாகவும் இருக்கவேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் முறை இதில் முக்கிய பங்கு வகிக்கும். 2 முதல் 3 மாதங்கள் உடற்பயிற்சி மையத்தில் தீவிரமாக செயல்படுவதை விட, உங்கள் அன்றாட வேலைகளின் செயல்திறனை அதிகரித்துக்கொண்டு, உங்களால் நிலையாக பின்பற்ற இயலும் உடற்பயிற்சிகளை மட்டும் கடைப்பிடிக் கலாம். உட்கார்ந்து இருக்கும் நேரத்தை குறைத்துக்கொண்டு அவ்வப்போது நடக்கலாம்.

எடைக் குறைப்பு என்றவுடன் கடுமையாக பட்டினி கிடந்து மயங்கிவிழாமல், அன்றாட உணவு பழக்கத்தை பழங்கள், காய்கறிகள் அதிகமாக உள்ள ஆரோக்கிய உணவாக மாற்றிக்கொள்ள வேண்டும். மேலும்

சாப்பிடும் நேரத்தை குறிப்பிட்ட இடைவெளிக்குள் சுருக்கிக்கொள்வதால், தேவையற்ற கொழுப்புகளை கரைக்க முடியும்.

குறைந்தது 6 மணி நேரம் சீரான தூக்கம், உடல் எடையை குறைக்க சிறப்பாக உதவும். திட உணவை குறைத்து தண்ணீர் மற்றும் நீராகாரங்களை அதிகம் உட்கொள்ளவேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது எடைக் குறைப்பை வேகப்படுத்தும்.

குறுகிய காலத்தில் அதிக எடைக் குறைப்பது ஆரோக்கியமான முறையாகாது. சிறிது காலதாமதம் ஆனாலும் மேற்கூறப்பட்ட குறிப்புகளை பயன்படுத்தினால் சீராக எடை குறைவதை நீங்களே உணரலாம். இவை அனைத்தையும் பின்பற்றினாலும், 2 நாட்களுக்கு ஒருமுறை எடை குறைந்து விட்டதா என்று பார்த்து, மனஅழுத்தத்தை அதிகரித்துக்கொண்டால் எடை அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது. நிதானமான மனநிலையே, எடையைக் குறைக்க கூடுதல் உந்துகோலாக அமையும். 

Tags:    

மேலும் செய்திகள்