குழந்தைகளும் செடி வளர்க்கலாம் - சுபாங்கி

எனது குழந்தைகள் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்று விரும்பினேன். அதனால் அவர்களை செடிகள் நடுவது, மண்ணில் விளையாடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தினேன்.

Update: 2022-09-25 01:30 GMT

"குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே இயற்கை மீது ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் உண்டாக்கினால், சுற்றுச்சூழலைக் காப்பது எளிதாக இருக்கும்" என்கிறார் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சுபாங்கி. 13 ஆண்டுகள் ஐ.டி. துறையில் பணிபுரிந்த இவர், அப்பணியில் இருந்து விலகி தற்போது குழந்தைகளுக்கு செடிகள் வளர்ப்பது, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஊட்டச்சத்துள்ள மண், இயற்கை உரம் ஆகியவற்றை தயாரித்தும் விற்பனை செய்கிறார்.

அவரிடம் பேசியபோது…

தாத்தா-பாட்டி காலத்தில் குழந்தைகள் தவழ ஆரம்பிக்கும்போதே மண்ணில் விளையாட ஆரம்பிப்பார்கள். மரம், செடி, பறவை, விலங்கு போன்றவற்றுடன் பழகி இயற்கையோடு கலந்து வாழ்ந்தார்கள். அதனால் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால், இப்போது பல பெற்றோர்கள், பாதுகாப்பு என்ற பெயரில் குழந்தைகளின் இயல்புகளை மாற்றிவிட்டார்கள்.

ஒருமுறை தடுப்பூசி போடுவதற்காக என்னுடைய குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அப்போது மற்றொருவர் தனது குழந்தையை அழைத்து வந்திருந்தார். அவர் குழந்தையைத் தரையில் விடாமல் மெத்தையிலேயே வளர்த்திருக்கிறார். எனவே அந்தக் குழந்தைக்கு தரையில் நடக்கவே தெரியவில்லை. மெத்தையில் தான் இயல்பாக இருக்கிறது. இவ்வாறு பெற்றோர் அளவுக்கு மீறி பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

எனது குழந்தைகள் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்று விரும்பினேன். அதனால் அவர்களை செடிகள் நடுவது, மண்ணில் விளையாடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தினேன். பள்ளியில் செய்முறை பயிற்சிகள் ஏதாவது கொடுத்தால் அதற்கான பொருட்களைக் கடைகளில் வாங்காமல் இயற்கையாகவும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தயாரிப்பு எப்படி என்பதையும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். பின்பு இதை மற்ற குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வகுப்புகள் எடுக்கத் தொடங்கினேன்.

தாவரங்களையும் குழந்தையாகப் பாவித்ததால், அவையும் ஊட்டச்சத்துள்ள மண், உரம் ஆகியவை இருந்தால் தான் ஆரோக்கியமாக வளர முடியும் என்று தோன்றியது. இதற்காக ரசாயனங்கள் கலந்த மண் மற்றும் உரங்கள் பயன்படுத்துவதில் எனக்கு விருப்பமில்லை.

எனவே தீமை செய்யும் கிருமிகளை அழிக்கும் வகையில், ரசாயனங்கள் இல்லாமல் வேப்பிலையில் உரம் மற்றும் மண் கலவை தயாரிக்க ஆரம்பித்தேன். அவற்றை ஒன்றரை வயதுக் குழந்தைகள்கூட கையாண்டு செடி வளர்க்க முடியும்.

தாவரங்களை வளர்ப்பதற்குத் தேவையானப் பொருட்களை சுத்தமாகவும், உயர்தரத்திலும் தயாரித்து வருகிறேன். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிந்தது.

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் இயற்கையை சார்ந்து வாழ வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியமானது" என்றார் சுபாங்கி. 

Tags:    

மேலும் செய்திகள்