'டிஷ்வாஷர்' உபயோகிப்பவர்களுக்கு ஆலோசனைகள்

நம் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான டிஷ்வாஷர்களை கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும்.

Update: 2023-01-15 01:30 GMT

வீட்டு வேலைகளில் பல பெண்களுக்கு சலிப்பை உண்டாக்குவது 'பாத்திரம் துலக்குதல்' தான். அவ்வாறு தினமும் மூன்று வேளையும், பாத்திரம் துலக்கும் சிரமத்தை நீக்குவதற்கு உதவுவது 'டிஷ்வாஷர்'. இதனால் பெண்கள் நேரத்தை மிச்சப்படுத்தி ஆக்கப்பூர்வமான வழியில் செலவிடலாம். 'டிஷ்வாஷர்' பயன்படுத்துபவர்கள் மற்றும் புதிதாக வாங்கப் போகிறவர்களுக்கான ஆலோசனைகள் இதோ…

சமையல் அறையில் எவர்சில்வர், பீங்கான், இரும்பு, பிளாஸ்டிக், அலுமினியம் என பலவகையான பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். இவை ஒவ்வொன்றையும் சுத்தம் செய்வதற்கு மாறுபட்ட வெப்பநிலையில் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். எனவே, எல்லாவகைப் பாத்திரங்களையும் ஒன்றாக டிஷ்வாஷரில் பயன்படுத்த முடியாது.

பிளாஸ்டிக், அலுமினியம், காஸ்ட் அயர்ன், மரம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களை, டிஷ்வாஷர் மூலம் சுத்தம் செய்யும்போது தண்ணீரின் வெப்பநிலையால் அவை சேதம் அடையலாம். எனவே, டிஷ்வாஷர் வாங்குவதற்கு முன்பு இவற்றை மனதில்கொண்டு செயல்பட வேண்டும்.

சில வகை உணவுகள் தயாரிக்கும் போது பாத்திரங்களில், விடாப்பிடியான பிசுக்கு உண்டாகும். இத்தகைய பாத்திரங்களை சுத்தப்படுத்துவதற்காக டிஷ்வாஷரில் அடுக்குவதற்கு முன்பு, அவற்றில் படிந்து இருக்கும் உணவுத் துணுக்குகளை அகற்ற வேண்டும். இல்லையெனில், பாத்திரங்களை சுத்தம் செய்ய டிஷ்வாஷர் உயர்அழுத்த நீரைப் பயன்படுத்தும்போது, அதில் உணவுத் துணுக்குகள் அடைத்துக் கொண்டு எளிதில் பழுதாகலாம்.

நம் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான டிஷ்வாஷர்களை கவனமுடன் தேர்வு செய்ய வேண்டும். தினமும் கழுவ வேண்டிய பாத்திரங்களின் எண்ணிக்கை, தண்ணீரை வடிகட்டும் அமைப்பு, பாத்திரங்களைக் கழுவும் சுழற்சி மற்றும் இயக்க முறை ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாத்திரம் சுத்தம் செய்யும் பொருட்கள், சலவை சோப்பு உள்ளிட்டவை டிஷ்வாஷர் இயந்திரங்களுக்கென்று பிரத்யேகமாக கிடைக்கின்றன. அதில், உங்களுடைய இயந்திரத்திற்கு ஏற்றது, அவை தடையின்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள், மாதந்தோறும் அவற்றுக்குச் செலவிடும் தொகை என அனைத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இவற்றை முன்பே கணக்கிட்டு அதன் பிறகு டிஷ்வாஷர்களில் முதலீடு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்