குழந்தையை தத்தெடுக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது என்பது, உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான அர்ப்பணிப்பு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.;
குழந்தையின்மை பிரச்சினை தற்போது அதிகரித்து வரும் சூழலில், பல தம்பதிகள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்கிறார்கள். ஒரு குழந்தைக்கு புதிய வாழ்க்கையையும், குடும்பத்தையும், அதிக அளவு அன்பையும் கொடுக்கக்கூடிய கருணை மிகுந்த செயல்தான் தத்தெடுப்பு. இருந்தாலும், அது எளிதான காரியம் இல்லை. குழந்தையை தத்தெடுப்பதற்கு முன்பு தம்பதிகளும், அவர்களின் குடும்பத்தினரும் மனதளவில் தங்களை தயார்படுத்திக்கொள்வது முக்கியம்.
ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது என்பது, உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான அர்ப்பணிப்பு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தத்தெடுப்பதற்கு முன்பு அதில் உள்ள நன்மை, தீமைகள் குறித்து ஆராய வேண்டும். அந்த வகையில் ஒரு குழந்தையை தத்தெடுப்பதற்கு முன்பு, நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்.
தத்தெடுப்பு எனும் செயல்முறையில் குழந்தைதான் முக்கியமான நபர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தத்தெடுத்த பின்பு குழந்தைக்கு நல்ல, மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். குழந்தையின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தத்தெடுத்த தம்பதிகள் மட்டுமின்றி, அந்த குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும், குழந்தையின் மீதான புரிதல் இருக்க வேண்டியது அவசியம்.
குழந்தை தத்தெடுப்பில் தற்போது பல மோசடிகள் நடக்கின்றன. ஒரு குழந்தையை தத்தெடுக்கும் முன்பு, அது பற்றிய விஷயங்களை முழுமையாக ஆராய்வது அவசியம். ஏஜென்சிகள் மூலம் தத்தெடுக்க திட்டமிட்டிருந்தால், அந்த ஏஜென்சி உண்மையானதா என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாகவும், மற்ற வகையிலும் தொடர்பு கொள்ளாமல், அந்த ஏஜென்சிக்கு நேரில் சென்று அது செயல்படும் விதம் மற்றும் அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்.
தத்தெடுத்த குழந்தை இதுவரை வளர்ந்த சூழலும், இனி வளரப்போகும் சூழலும் வெவ்வேறாக இருக்கும். பழைய சூழலில் இருந்து உடனடியாக வெளிவந்து, புதிய சூழலை ஏற்றுக்கொள்வது என்பது குழந்தைக்கு சற்றே கடினமானது என்பதை தம்பதியர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைக்கு மட்டுமின்றி, தம்பதிக்கும் இது புது உணர்வுதான். இதனால் ஆரம்பத்தில் குழந்தைக்கும், தம்பதியருக்கும் இடையே இடைவெளி உண்டாகலாம்.
தத்தெடுப்பதற்காக ஒரு குழந்தையை தேர்வு செய்யும் முன்பு அக்குழந்தையைப் பற்றியும், அதன் மருத்துவ பின்னணியைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.
தத்தெடுக்கும் நபரின் தற்போதைய குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய படம், ஆதார் அட்டை, வெளிநாட்டினராக இருந்தால் பாஸ்போர்ட், இருப்பிட சான்று, தத்தெடுக்கும் ஆண்டிற்கு முந்தைய ஓராண்டின் வருமான சான்று, தம்பதிகளாக இருந்தால், இருவரின் உடல்நிலை குறித்த முழு மருத்துவ சான்று, தம்பதி என்பதற்கான திருமணப்பதிவு சான்று, விவாகரத்து ஆன நபரென்றால், அதற்கான சான்று, துணை இறந்திருந்தால் அதற்கான இறப்பு சான்று, குடும்ப உறுப்பினரிடம் இருந்து தத்தெடுப்பதாக இருந்தால், அதற்கான முறையான சம்மதம், 2-வது குழந்தையாக தத்தெடுக்க நினைத்தால், முதல் குழந்தையின் சம்மதமும் அவசியமாகும்.