கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு…
மற்றவர்களுக்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாது. இது இரண்டு சிக்கலைத் தரும். ஒன்று உங்கள் கிரெடிட் அளவுக்கேற்ப பணம் முழுவதையும் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாத சூழலில் உங்களுக்குச் சுமையை அதிகரிக்கலாம்.;
கிரெடிட் கார்டு எனும் கடன் அட்டையை கவனமாகப் பயன்படுத்தினால் நன்மை தரக்கூடியது. அளவுக்கு மீறி உபயோகப்படுத்தினால் அதுவே சிக்கலை உண்டு பண்ணும். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், அதை எவ்வாறு கவனமாக கையாள்வது என்று தெரிந்து கொள்வோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு:
தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு கிரெடிட் கார்டு போதும். ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கி பயன்படுத்துவதால், பில் கட்டணம் முதல் தவணை தேதி வரை பல சிக்கல்களுக்கு ஆளாகலாம்.
பணம் எடுக்க கிரெடிட் கார்டு வேண்டாம்:
கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. மாறாக, அதில் இருந்து பணமாக எடுத்து பயன்படுத்துவதால், நீங்கள் பணம் எடுக்கும் நொடியில் இருந்து அதற்கான வட்டித்தொகை கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எல்லா இடங்களிலும் கிரெடிட் கார்டு வேண்டாம்:
கிரெடிட் கார்டு தான் இருக்கிறதே என்று, பூக்கடை தொடங்கி ஷாப்பிங் மால் வரை கார்டைத் தேய்க்காதீர்கள். ஏனெனில் 100 ரூபாய் தானே என்று பார்க்கும் இடமெல்லாம் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் கடன் தொகை சிறுகச் சிறுக சேர்ந்து, பெரிய தொகையாய் மாறும்.
பகிரக்கூடாதது கிரெடிட் கார்டு:
மற்றவர்களுக்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாது. இது இரண்டு சிக்கலைத் தரும். ஒன்று உங்கள் கிரெடிட் அளவுக்கேற்ப பணம் முழுவதையும் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாத சூழலில் உங்களுக்குச் சுமையை அதிகரிக்கலாம்.
சலுகைகளுக்கு மயங்காதீர்கள்:
உங்கள் தேவைக்கான பொருட்களை வாங்கி முடித்தாலும், சலுகை கிடைக்கிறது என்று தேவைக்கு மீறி வாங்கி குவிப்பதை நிறுத்துங்கள். இதன் மூலம் கடன் அதிகமாகும். பயனற்ற பொருட்கள் வாங்கும் பழக்கம் உருவாகும்.
கிரெடிட் கார்டு கட்டணம்:
உங்கள் தவணைத்தேதி மற்றும் வட்டியில்லாக் காலம் எப்போது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஏனெனில் வட்டியில்லை என்பது பணம் செலுத்தும் நாள் மற்றும் பொருள் வாங்கிய நாட்களைப் பொறுத்து மாறுபடும். இதில் அலட்சியமாக இருந்தால் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஒவ்வொரு மாதமும் நீங்கள் கிரெடிட் கார்டு கொண்டு செலவழிக்கும் பணத்தை எழுதிக்கொண்டே வாருங்கள். முழுத்தொகையை கணக்கிட்டு ஒவ் வொரு மாதமும் உங்கள் பில் தேதியில் அதைச் செலுத்தி விடுங்கள். இல்லையெனில் 3 சதவீத வட்டித்தொகை என்பது, 35 முதல் 40 சதவீதம் வரை போகலாம். இது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கக்கூடும்.
கிரெடிட் கார்டு சுய பாதுகாப்புக்கு:
கார்டுக்கு பின்பக்கத்தில் 'பின்' நம்பரை எழுதி வைக்கக் கூடாது. ஆறு மாதத்துக்கு ஒரு முறை உங்கள் பின் நம்பரை மாற்றுங்கள். பணப்பரிவர்த்தனை தகவல் அடங்கிய ரசீதுகளை அப்படியே அப்புறப்படுத்தாமல் கிழித்து போடுங்கள். பாதுகாப்பற்ற இடங்களில் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டாம்.
கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்துவிட்டால் முறையாக ஒப்படையுங்கள். இல்லையென்றால் பராமரிப்புக் கட்டணம், ஆண்டுக்கட்டணம் எனக் கணக்கிட்டு அதற்கும் வட்டித்தொகை செலுத்த வேண்டியிருக்கும்.