இயற்கையுடன் இணைந்த வாழ்வுக்கு வழிகாட்டும் அழகேஸ்வரி

இயற்கை மற்றும் தற்சார்பு வாழ்வியலை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அதே நேரம் சிறிது வருமானத்துக்கும் வகை செய்ய வேண்டும் என்று யோசித்து சத்து மாவு, மசாலாப் பொருட்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்கள், தானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யத் தொடங்கினேன்.

Update: 2022-07-10 01:15 GMT

பாரம்பரிய விதைகளைக் காக்கவும், மரங்களை வளர்க்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இயற்கை மற்றும் தற்சார்பு வாழ்வியலை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவும் தொடர்ந்து இயங்கி வருகிறார் திருப்பூர் மாவட்டம், போத்தநாயக்கனூரைச் சேர்ந்த அழகேஸ்வரி. இது குறித்த தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

"வணிக மேலாண்மையில் முதுகலைப் படித்த நேரத்தில் மனவளக்கலை பயிற்சி பெற்றேன். பின்பு துணிகளுக்கு சாயமேற்றும் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினேன். அதன்பிறகு 2009-ம் ஆண்டு இயற்கை அறிவியலாளர் நம்மாழ்வாரை சந்தித்தேன். அப்போதுதான் வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதல், தற்போதைய உணவுக் கலாசாரத்துக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என பலவற்றை தெரிந்துகொண்டேன்.

அவற்றை தவிர்ப்பதற்கு தற்சார்பு வாழ்வியலுக்கு மாற வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும், வருமானம் தரும் பணியை உடனடியாக விட முடியவில்லை. ஆனாலும் சாயக் கழிவுகளால் ஒரு ஆற்றை அழித்து செய்யும் தொழிலில் ஊதியம் பெறுவது மனதுக்கு உறுத்தலாகவே இருந்துகொண்டிருந்தது.

அந்த நேரத்தில்தான் நம்மாழ்வாரின் இழப்பு என்னைப் பெரிதும் பாதித்தது. உடனே தனியார் நிறுவன வேலையில் இருந்து விலகி, அவரது பாதையில் நடக்கத் தொடங்கிவிட்டேன்.

வேலையில் இருந்து விலகிய பிறகு என்ன செய்தீர்கள்?

இயற்கை மற்றும் தற்சார்பு வாழ்வியலை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். அதே நேரம் சிறிது வருமானத்துக்கும் வகை செய்ய வேண்டும் என்று யோசித்து சத்து மாவு, மசாலாப் பொருட்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்கள், தானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யத் தொடங்கினேன். மாடித் தோட்டத்தை அமைத்துத் தரும் பணியையும் செய்து வருகிறேன். அதிக வருமானம் இல்லாவிட்டாலும் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் வாழ்கிறேன்.

அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக உருவாக்குவதற்கு உங்களின் ஆலோசனை என்ன?

இயற்கையில் இருந்து விலகி நிற்கும் நவீன வாழ்க்கைமுறை, விஷம்போல் பரவி மக்களை உடலளவிலும், மனதளவிலும் நோயுற்றவர்களாக மாற்றி வருகிறது. உண்ணும் உணவையும், வாழ்க்கை முறையையும், சிந்தனையையும் மாற்றினாலே ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முடியும். பசித்து உண்பது, தொலைக்காட்சியையோ, கைப்பேசியையோ பார்க்காமல் உணவில் கவனத்தை பதித்து நன்றாக மென்று ருசியை அனுபவித்து சாப்பிடப் பழகுவது, நாகரிக மோகத்தில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் பொருட்களை வாங்கிக் கொடுக்காமல், கமர்கட், கடலை மிட்டாய், புட்டு, கொழுக்கட்டை, சுண்டல் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது, சின்னச்சின்ன உடல் உபாதைகளை இயற்கை முறைகளில் குணப்படுத்திக் கொள்வது என அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்றிக் கொண்டாலே ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கலாம்.

உங்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க சில விஷயங்களைச் சொல்லுங்கள்?

பல கிராமங்களில் களப்பணிகள் செய்திருக்கிறோம். விதைப் பந்துகளை உருவாக்கி மரம் நடுதலை மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். 'பனைக்கான நெடும்பயணம்' என்ற ஒரு நடைப்பயணத்தை எங்கள் குழு மூலமாக ஏற்பாடு செய்து, நம்மாழ்வார் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பாக அவரையும் அதில் பங்கேற்கச் செய்து வெற்றிகரமாக பல மாற்றங்களை அறிமுகம் செய்தோம்.

இயற்கை வழி வேளாண்மையில் வெற்றிபெற்றுள்ள சிக்கிம் மாநில முதல்-மந்திரி, அதிகாரிகள், விவசாயிகள் எல்லோரையும் சந்தித்து, அம்மாநில அரசின் ஒத்துழைப்புடன் 'சூழ்' என்ற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறேன். இயற்கை வேளாண்மையில் வெற்றிபெற்றுள்ள அம்மாநிலத்தின் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதில் பதிவு செய்திருக்கிறோம். அதை முன்மாதிரியாக வைத்து, தமிழ்நாட்டையும் முழுவதும் இயற்கை வழி வேளாண்மை மாநிலமாக உருவாக்குவதற்கான ஆய்வறிக்கையை தயாரித்துக்கொண்டிருக்கிறேன். லாப நோக்கமின்றி நம்மாழ்வார் புத்தகங்களையும், கொள்கை சார்ந்த புத்தகங்களையும் பதிப்பிக்கிறேன்.

உங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள், கவுரவங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

2020-ம் ஆண்டு முதல் பல அமைப்புகள் சமூக ஆர்வலர் விருது, இயற்கை விருது, பசுமை விருது, சூழலியல் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கியிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடும்படியாக, வானகம் மூலமாக 'நம்மாழ்வார் விருது' கிடைத்தது. நான் நடத்தும் நம்ம ஊரு சந்தைக்காக, தனியார் பண்பலை வானொலி விருதையும் பெற்றிருக்கிறேன்.

பிரதம மந்திரியின் ஆலோசகர்களில் ஒருவரும், ஐ.ஐ.எம். பேராசிரியருமான அகமதாபாத்தைச் சேர்ந்த அனில் குப்தா, அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான நாடுதழுவிய அமைப்பை வைத்திருக்கிறார். ஆண்டுதோறும் அகமதாபாத்தில் அவர் நடத்தும் பாரம்பரிய உணவுக் கண்காட்சியில், தமிழ்நாடு சார்பாக நாங்கள்தான் பங்கேற்கிறோம். அந்த நிகழ்வில், நீர்நிலைகளைத் தூர் வாரியது முதல் குழந்தைகளுக்கான நூலகம் அமைத்தது வரை என்னுடைய அத்தனை பணிகளையும் பட்டியலிட்டுச் சொல்லி எல்லோருக்கும் என்னை அறிமுகப் படுத்தியதை பெரிய கவுரவமாக கருதுகிறேன்.

உங்கள் லட்சியம் என்ன?

நம்மாழ்வாரின் கனவான 'வாழும் கிராமங்கள்' என்ற முன்மாதிரி கிராமங்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டை இயற்கைவழி வேளாண் மாநிலமாக மாற்ற என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும். 'மாற்றுக் கல்வி' என்பது வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையான உணவுக்கான புரிதல், உணவு உற்பத்தி, மருத்துவம், உடலியல் ஆகியவற்றை முதலில் புரிய வைப்பது.

சுற்றியிருக்கும் சூழலையும், கலை சார்ந்த சில விஷயங்களையும் மாற்றுக் கல்வியில் கொடுக்கிறார்கள். இந்த நல்ல விஷயங்கள் அதிக குழந்தைகளை சென்றடைய வேண்டும் எனில், அரசுப் பள்ளிகளிலேயே மாற்றுக் கல்வியையும் சேர்க்க வேண்டும். அதற்கென ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மாவட்டந்தோறும் தொடங்க வேண்டும்.

அதுவே எனது பெருங்கனவு லட்சியம் எல்லாம். பயிற்சி நிறுவனத்தைத் தொடங்கி தற்சார்பு வாழ்வியல் பயிற்சியளிக்க வேண்டும் என்பதும் எனது திட்டம். 

Tags:    

மேலும் செய்திகள்