கோடைக்கேற்ற குளியல்
தலை முதல் கால் வரை களிமண்ணை பூசி 45 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும்.;
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில், உடல் உஷ்ணமாவதைத் தடுக்கும் வழிகளில் முக்கியமானது 'குளியல்'. சூடான தண்ணீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள் கோடை காலத்திலும் அதையே பின்பற்றுவார்கள். வெப்பத்தின் தாக்கத்தை தவிர்ப்பதற்காக சிலர் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பார்கள். இவற்றில் கோடை காலத்துக்கு ஏற்ற குளியல் எது? என்று தெரிந்துகொள்வோம்.
சூடான தண்ணீரில் குளிக்கும்போது நரம்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் உள்ள இறுக்கம் நீங்கி தளர்வு உண்டாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சுவாசப் பாதைகளில் இருக்கும் அடைப்புகள் நீங்கி சுவாசம் சீராகும். சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கும். மனஅழுத்தம் குறைந்து நிம்மதியான தூக்கம் வரும்.
குளிர்ந்த தண்ணீரில் குளிக்கும்போது உடலில் உள்ள சோர்வு மற்றும் வலிகள் நீங்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வீக்கம் குறையும். சருமத்திலும், கூந்தலிலும் உள்ள இயற்கையான எண்ணெய்ப் பசையை பாதுகாக்கும். திறந்திருக்கும் சருமத்துளைகளை மூடும். உடலுக்கு ஆக்சிஜன் அதிகமாக செல்ல வழிவகுக்கும். சருமப் பிரச்சினைகளால் உண்டாகும் அரிப்பு நீங்கும்.
கோடை காலத்தில் தினமும் இரண்டு வேளை குளிப்பது நல்லது என்று சரும மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். வெயிலின் தாக்கத்தால் சிலர் நீண்ட நேரம் குளிப்பார்கள். இதனால் இயற்கையான எண்ணெய்ப் பசை நீங்கி சருமம் வறட்சி அடையும். குளிர்ந்த நீர் அல்லது வெந்நீர் இவற்றில் எதில் குளித்தாலும் உடலுக்கு நன்மை உண்டு. ஆனால், கோடையில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது சிறந்தது.
வாரம் ஒருமுறை உடல் முழுவதும் நல்லெண்ணெய் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். தலை முதல் கால் வரை களிமண்ணை பூசி 45 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடையும்.
தண்ணீரில் நன்னாரி வேர் அல்லது வெட்டி வேரை ஊறவைத்து தினசரி குளிக்கலாம். பெப்பர் மின்ட், லெமன் ட்ரீ, ரோஸ் வுட், சாண்டல் வுட் போன்ற எசன்ஷியல் எண்ணெய்களை சில துளிகள் கலந்து குளிக்கலாம். வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளிக்கலாம். இவை உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைக் கொடுக்கும். வெப்பத்தால் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கும்.
உடல் சூட்டை தணிப்பதற்கு செம்பருத்தி, வெந்தயம், நெல்லிக்காய், வேப்பிலை, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி கீரை, கற்றாழை ஜெல் போன்ற மூலிகைகளை அரைத்து ஷாம்புவிற்கு பதிலாக பயன்படுத்தலாம்.