நாக சைதன்யா - சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
நாக சைதன்யா - சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்பிளக்ஸ் ரூ 50 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
ஐதராபாத்,
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தெலுங்கில் 'ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிரிவதாக அறிவித்து விவாகரத்து பெற்றுகொண்டனர்.
அதன் பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல் பரவியநிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்தான புகைப்படங்களை நடிகர் நாகார்ஜுனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
மேலும் வருகின்ற டிசம்பர் 4ம் தேதி இவர்களின் திருமணம் ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நாக சைதன்யா – சோபிதா துலி பாலாவின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் திருமண நிகழ்வை ஆவணப்பட பாணியில் காட்சிப்படுத்தும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 50 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரின் திருமண ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.