'லாரா' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

அறிமுக இயக்குனர் மணி மூர்த்தி எழுதி இயக்கிய லாரா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.;

Update: 2025-01-04 15:46 GMT

மணி மூர்த்தி இயக்கத்தில் கார்த்திகேசன் தயாரிப்பில் நேற்று வெளியான திரைப்படம் 'லாரா'. திரையரங்குகளில் வெளியான இந்த படத்தில் அசோக் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் கார்த்திகேசன், அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, மேத்யூ வர்கீஸ், எஸ். கே. பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் துப்பறியும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் மணி மூர்த்தி எழுதி இயக்கிய 'லாரா' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

காரைக்கால் பகுதியில் கடற்கரையில் ஒதுங்கிய பெண் சடலத்தை போலீஸ் அதிகாரி கார்த்திகேசன் கைப்பற்றி விசாரிக்கிறார். பெண் முகம் சிதைந்து இருப்பதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. உள்ளூர் கவுன்சிலரிடம் டிரைவராக இருப்பவர் தனது மனைவியை கொன்று வீசி இருக்கலாம் என்று சந்தேகிக்க, காணாமல் போன அந்த பெண் உயிரோடு வருகிறாள். தொடர்ந்து ஒரு காதல் ஜோடியின் கதை, ஹாவாலாவில் பணமாற்றம், பெண்ணுக்கு நடந்த கொடூர பாலியல் சித்ரவதை போன்ற சம்பவங்கள் விசாரணை வளையத்துக்குள் அடுத்தடுத்து திருப்பங்களாக விரிகின்றன.

கடலில் பிணமாக கிடந்த பெண்ணை ஒருவர் பாலத்தில் இருந்து வீசியதாக அதிர்ச்சி தகவலும் வருகிறது. அப்படி வீசியவர் யார்? பிணமாக கிடந்த பெண்ணின் அடையாளத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடிந்ததா? என்பது மீதி கதை.

நாயகனாக பிற்பகுதி கதையில் வரும் அசோக்குமார் கதாபாத்திரத்தில் தனக்கான இருப்பை அழுத்தமாக பதிய வைத்துள்ளார். ஆதரவற்ற பெண் மீது காதல், அவரை இன்னொரு பரிமாணத்தில் சந்தித்து கலங்குவது, இறுதியில் காதலியை இழந்து கதறுவது என்று ஜீவனுள்ள நடிப்பை வழங்கி உள்ளார். 

கார்த்திகேசனுக்கு முழு கதையையும் தாங்கி பிடிக்கும் வலிமையான போலீஸ் அதிகாரி வேடம். விசாரணையில் நிதானமும் அழுத்தமும் காட்டி கதாபாத்திரத்துக்கு முழுமையான நியாயம் செய்துள்ளார். அனுஷ்ரேயா ராஜன், வெண்மதி, வர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பாலா, எஸ்.கே.பாபு. திலீப் குமார், பிரதீப் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு

விசாரணை காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம். ஆர்.ஜே.ரவின் கேமரா, ரகு ஸ்வரவண் குமார் இசை காட்சிகளோடு ஒன்ற செய்து இருப்பது பலம்.

துப்பறியும் திரில்லர் கதையை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பையும் பதற்றத்தையும் எகிற வைக்கும் வகையில் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி திறமையான இயக்குனராக கவனம் பெறுகிறார் மணி மூர்த்தி. கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம் இருப்பது சிறப்பு.

Tags:    

மேலும் செய்திகள்