நடிகர் சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' டீசர் வெளியீடு
நடிகர் சிரஞ்சீவியின் ''விஸ்வம்பரா' படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி வெளியாக உள்ளது.;
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் இதுவரை 156 படங்களில் நடித்து இருக்கிறார். 1978 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி வெளியான 'பிராணம் கரீது' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், அதற்கடுத்து வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் தோல்விப்படமானது.
இவர் தற்போது 'விஸ்வம்பரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். 18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்து இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும், சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தில் அதிகமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் கிராபிக் காட்சிகள் கவனம் பெறுகின்றன. இப்படம் வருகிற 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது.