இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ் நடிகை!
இந்தியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் நடிகை ஸ்ருதிகா பங்கேற்றுள்ளார்.;
மும்பை,
தமிழை போலவே, இந்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழில், இப்போதுதான் 8வது சீசன், ஆனால் இந்தியில் தற்போது 18வது சீசன் தொடங்கப்பட்டு விட்டது. 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை, 8வது சீசன் முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில், சல்மான் கான் பல சீசன்களை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
நடிகை ஸ்ருதிகா அர்ஜுன், குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் பிரபலம் ஆனார். மறைந்த மூத்த நடிகர், தேங்கா ஸ்ரீநிவாசனின் பேத்தியான இவர், இளம் வயதில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர், முதன்முதலில் நடித்த படம் ஸ்ரீ. இந்த படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதில் அவர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். மாதவனுடன் நளதமயந்தி படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தித்திக்குதே படத்திலும் துணை கதாப்பாத்திரமாக வந்தார். ஒரு சில படங்களிலேயே நடித்து, திரையுலகை விட்டு விலகிய இவர், பின்னர் திரையுலகை விட்டு விலகினார். அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, செட்டில் ஆகிவிட்டார். இவர் பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்களை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருகிறார். வெளிநாட்டிற்கும் அழகுசாதனப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறார். இவர் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்களுக்கு இவரே விளம்பரத் தூதராகவும் உள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் டைட்டில் வின்னர் ஆனார். இதையடுத்து இவருக்கு ரசிகர்கள் கூடினர். தனியாக சமையல் நிகழ்ச்சியையும் தொடங்கி, அதிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார் ஸ்ருதிகா. இவர், இந்தி பிக்பாஸிற்குள் நுழையும், முதல் தென்னிந்திய தமிழ் பெண்ணாக இருக்கிறார்.
தமிழ்-இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இந்தி பிக்பாஸை, சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இதில், கலந்து கொண்ட ஸ்ருதிகா அவரை "வணக்கம்" தெரிவிக்க சொல்லி மகிழ்ச்சி அடைந்தார். இந்தி சின்னத்திரை உலகிற்குள் நுழைந்துள்ள ஸ்ருதிகாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.