'முரா' படக்குழுவினரை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா
மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள 'முரா' படக்குழுவினரை நடிகர் எஸ்.ஜே.சூர்யா பாராட்டியுள்ளார்.;
சென்னை,
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் தற்பொழுது முஹம்மது முஸ்தபா இயக்கிய 'முரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கனி கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எச்ஆர் பிக்சர்ஸின் கீழ் ரியா ஷிபு தயாரித்த இப்படத்தின் திரைக்கதையை சுரேஷ் பாபு எழுதியுள்ளார். மிதுன் முகுந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 8-ந் தேதி வெளியானது. திருவனந்தபுரத்தை மையமாக வைத்து ஆக்சன் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. முராவில் மாலா பார்வதி, கனி குஸ்ருதி, கண்ணன் நாயர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தநிலையில் படக்குழுவை பாராட்டி நடிகர் எஸ்.ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "இது மாதிரியான ஒரு ஆக்சன் நிரம்பிய உணர்வில் பார்வையாளர்களின் இதயப்பூர்வமான உணர்வைப் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தை குறித்து வரும் நல்ல விமர்சனங்களை பற்றி கேட்டேன். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், இயக்குனர் முஸ்தபா மற்றும் நடித்த இளம் நடிகர்களுக்கும் வாழ்த்துகள்" என கூறியுள்ளார்.