சூர்யாவின் சனிக்கிழமை : என்னை விட எஸ்.ஜே.சூர்யாவுக்கு பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சியே - நடிகர் நானி

'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் என்னை விட எஸ்.ஜே.சூர்யா பாராட்டு கிடைத்ததில் மகிழ்ச்சியே என்று நடிகர் நானி கூறியுள்ளார்..;

Update: 2024-09-02 16:18 GMT

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரது முந்தைய படங்களான 'ஷியாம் சிங்கா ராய்', 'அடடே சுந்தரா' திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. நானியின் 30-வது படமாக 'ஹாய் நான்னா' படம் கடந்தாண்டு இறுதியில் வெளியானது. இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடித்திருந்தார். 31வது படமாக அடடே சுந்தரா படத்தின் இயக்குநருடன் நானி இணைந்துள்ளார்.

டிடிவி நிறுவனம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் ஆகஸ்ட் 29 ம் தேதி வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிற நிலையில் உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.25 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இதுவரை 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் தயா என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்.ஜே.சூர்யா. விமர்சகர்கள் உள்ளிட்ட அனைவருமே எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பினை புகழ்ந்து தள்ளினார்கள். இதனிடையே 'சரிபோதா சனிவாரம்' படத்தின் வெற்றிக்கான நன்றி அறிவிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா கலந்துக் கொள்ளவில்லை.

இந்த விழாவில் நானி பேசும்போது, "இந்தக் கதை சூர்யாவின் கதையைவிட தயாவின் கதை என்று நம்புகிறேன். இதை படப்பிடிப்பின் போதே இயக்குநரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை நம்பவில்லை. இப்போது நடந்திருப்பதில் மகிழ்ச்சியே. நான் நடித்த படத்தில் என்னை விட எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைத்திருப்பது இந்தப் படத்திலிருந்து நான் எடுத்துச் செல்லும் பெரிய விஷயம். எனக்கு இது பெரும் மகிழ்ச்சி மட்டுமன்றி வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது" என்று நானி கூறியுள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்