'அலங்கு' திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகும் அன்புமணி ராமதாஸின் மகள்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா அன்புமணி தயாரிப்பாளராக தற்போது களமிறங்கியிருக்கிறார்.

Update: 2024-10-18 11:38 GMT

சென்னை,

`உறுமீன்', `பயணிகள் கவனிக்கவும்' போன்ற திரைப்படங்களின் இயக்குநரான எஸ்.பி. சக்திவேல் இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வரும் திரைப்படம் `அலங்கு'. இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதாநாயகனாக குணாநிதி நடிக்கிறார். மேலும் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணிக்கு ஆதரவாக மகள் சங்கமித்ரா பிரசாரங்களை மேற்கொண்டது பலருக்கும் நினைவிருக்கலாம். அன்புமணி ராமதாஸுக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் சங்கமித்ரா திரைப்பட தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.

புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் 'அலங்கு' திரைப்படமானது, தமிழக - கேரள எல்லைப்பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் - திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கிறது.

கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையாக வடிவமைத்துள்ளனராம்.

அலங்கு, என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தைச் சார்ந்ததாம். ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் காலப் போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இனப் பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் நினைவூட்டலுக்கும் இந்தப் பெயர் மிகவும் பொருந்தியிருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்