கிச்சா சுதீப்பின் 'மேக்ஸ்' படத்தை பாராட்டிய பார்த்திபன்
பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கிச்சா சுதீப்பின் ‘மேக்ஸ்’ திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.;
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது ஆக்சன் திரில்லர் படமாக 'மேக்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கிச்சா சுதீப் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்க, வி கிரியேசன்ஸ் சார்பில் எஸ். தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் சுதீபா, வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே மற்றும் அனிருத் பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் மேக்ஸ் திரைப்படத்தை பாராட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், " மேக்ஸிமம் ஆக்சன் உள்ள ஆனால் மிகவும் தத்ரூபமாக கதையோடு ஒட்டிய திரைக்கதையோடு ஒட்டிய அதிரடி ஆக்சன் ஒவ்வொன்றும். என்னிடம் பணிபுரிந்த விஜய வானன் இன்று விஜய கார்த்திகேயாவாக மாறி அற்புதமாக இயக்கியிருக்கும் படம் என்பதால் கூடுதல் ஆர்வத்துடன் இந்த படத்தை பார்த்தேன். இறுதிவரை சிறிய தொய்வும் இல்லாமல் மனுஷன் மிரட்டி இருக்கிறார்.
நண்பர் தாணுவுக்கு முதலில் வாழ்த்து சொல்லி பின் நாயகன் சுதீப் அவர்களிடமும் பேசினேன். படம் பிடித்துவிட்டால் கூடவே பைத்தியமும் பிடித்து விடும் எனக்கு. இரவெல்லாம் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டியே விடிந்து விடும். சுதீப் பைட் செய்யும்போது மாஸ்டர் சொல்லிக் கொடுத்து அடிப்பது போலவே இல்லை. அப்படி ஒரு பாடி லாங்குவேஜில் ஆகசனிலும் நடிப்பிலும் பின்னி பெடலெடுக்கிறார். அவர் செய்த பைட்டைவிட கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் பைட் செய்து வரும் இயக்குனர் கொண்டாடுவதும் இனி பலரும் அவரை கொண்டாடுவதும் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டுள்ளார்.