அரசியல் கேள்வி வேண்டாம்... பதில் அளிப்பதை தவிர்த்த ரஜினிகாந்த்

அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Update: 2024-05-29 06:09 GMT

சென்னை,

வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் ஓய்வு எடுப்பதற்காக கடந்த 16-ந்தேதி அபுதாபிக்கு நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். 11 நாட்கள் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுத்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று அதிகாலை அபுதாபியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்பொழுது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். விமான நிலையத்தில் ஒரு பெண் நடிகர் ரஜினிகாந்த்தை கண்டதும் வணங்கினார். அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வணக்கம் தெரிவித்தார். பின்னர் நடிகர் ரஜினிகாந்த் தனது காரில் ஏறி போயஸ் கார்டனில் உள்ள  இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

ஒவ்வொரு வருடமும் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஆன்மிக சுற்றுப்பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ரஜினிகாந்த், கொரோனா பரவல் காரணமாக சில வருடங்கள் அங்கு செல்லாமல் இருந்தார். கடந்த ஆண்டு தனது நண்பர்களுடன் சென்றார். பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்ற அவர், அங்கு வழிபட்டார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின. இந்த வருடமும் ரஜினிகாந்த் இமயமலை செல்ல இருப்பதாகக் கூறப்பட்டது. இதனிடையே அபுதாபியில் இருந்து நேற்று சென்னைக்கு திரும்பிய ரஜினிகாந்த், இன்று தனது நண்பர்களுடன் இமயமலை செல்வதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் இமயமலைக்கு புறப்பட்டு செல்லும் முன்பு போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஒவ்வொரு வருடமும் இமயமலைக்கு செல்கிறேன், இந்த வருடமும் அங்கு செல்வது மகிழ்ச்சி. பத்ரிநாத், கேதார்நாத் செல்ல உள்ளேன். இமயமலையில் 1 வாரம் தங்கியிருப்பேன் என்றார். 

தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்:- மன்னிக்கவும். அரசியல் கேள்விகள் வேண்டாமே.

கேள்வி:- தமிழ் சினிமாவில் இசையா? பாடலா? என்ற பிரச்சினை போய் கொண்டிருக்கிறதே?

பதில்:- கை கூப்பியபடி அண்ணா நோ கமெண்ட்ஸ் என தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார்..

இமயமலை புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் மீண்டும் சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

ஆன்மிகம் மிக முக்கியமான ஒன்று. இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் ஆன்மிகம் தேவைப்படுகிறது. என்னுடைய முதல் இமயமலை பயணத்தில் புது அனுபவம் கிடைத்ததால் ஒவ்வொரு வருடமும் செல்கிறேன். புதிய இந்தியா பிறக்குமா என்ற கேள்விக்கு, வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

இமயமலைக்கு செல்லும் ரஜினிகாந்த் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார். அடுத்த மாதம் 3 அல்லது 4-ம் தேதி அவர் சென்னை திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்