ஹிப் ஹாப் ஆதியின் புதிய ஆல்பம் இணையத்தில் வைரல்!
ஹிப் ஹாப் ஆதியின் புதிய ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.;
சென்னை,
தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார்.மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். கடைசி உலகப் போர் எனும் படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடித்து, இசை அமைத்திருந்தார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் இசையமைத்த, 'டக்கர்' என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவர், 'ரிட்டர்ன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் லண்டன், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வெற்றிகரமாக இசைக் கச்சேரி நடத்தி உள்ளார்
இவர், தற்போது மீண்டும் புதிய ஆல்பம் பாடல் ஒன்றை எழுதி, பாடி, இசையமைத்துள்ளார். அதன்படி 'செர்டிபைடு செல்ப் மேட்' (Certified self Made) என்ற பெயரில் வெளியாகி உள்ள புதிய ராப் பாடலில் அஜித்தே… எனும் வார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.