"நீல நிறச் சூரியன்" படத்தின் டீசர் வெளியானது

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநர் சம்யுக்தா விஜயன் இயக்கி, நடித்துள்ள 'நீல நிறச் சூரியன்' வரும் அக்டோபர் 4ம் தேதி வெளியாகிறது.

Update: 2024-09-30 16:09 GMT

சென்னை,

"நீல நிறச் சூரியன்" படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக சம்யுக்தா விஜயன் என்கிற ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் என்பது தான். ஒரு பள்ளியில் பிசிக்ஸ் ஆசிரியருக்கு சிறுவயது முதலே தான் ஆண் இல்லை பெண் என உணர்ந்து ஒரு கட்டத்தில் சிகிச்சை மூலம் பெண்ணாக மாற முடிவு எடுக்கிறார். இந்த சமூகம் அவரை எப்படி பார்க்கிறது? அவரது முடிவுக்கு பின் அவர் எதிர்கொண்ட பிரச்சனை என்ன? என்பதை மிக ஆழமாக கூறுகிறது படம்.

"ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது? எப்படி அதை கடந்து இவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்தவிதமான நாடகத்தன்மையும் இல்லாமல் கொடுக்க விரும்பினேன்" என்கிறார் திருநங்கை சம்யுக்தா விஜயன். இப்படத்தில் சம்யுக்தா விஜயன், கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகிய மூன்று பொறுப்புகளையும் மிகச்சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார். பர்ஸ்ட் காப்பி புரொடக்ஷன் சார்பில் மாலா மணியன் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார்.

'நீல நிறச் சூரியன்' வெளியாவதற்கு முன்பாகவே சர்வதேச இந்திய திரைப்பட விழா, கிளாஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டை பெற்றுள்ளது. இப்படத்தின் டீசரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்