நான் சினிமாவை விட்டு விலகாமல் இருக்க என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் தனது மனைவி ஆர்த்தியை பற்றி பேசியுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் தனுஷ் நடித்த 3 படத்தில் முதல் முறையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின்னர் "எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், டாக்டர், மாவீரன்" போன்ற பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், என் மனைவி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதே சினிமாவில் இருந்து வெளியேறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார். காரணம், "சினிமாவில் யார் எங்கிருந்து நம்மை நோக்கி அம்பு விட்டு தாக்குவார்கள் என்று சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு பிரச்சினைகள் பல ரூபத்தில் வந்து நம்மை தாக்கும். அது போன்ற ஒரு பிரச்சினையால் ஒருமுறை பெரிய அளவில் நான் மனசுடைந்து விட்டேன். சினிமாவை விட்டே வெளியேற முடிவெடுத்தேன்.
அப்போது என் மனைவி தான் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்த்து சமாளியுங்கள். சினிமாவை விட்டு மட்டும் ஒருபோதும் செல்லக்கூடாது என்று சொன்னார். அவர் அப்படி சொன்ன பிறகுதான் எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்படி என் மனைவி சொல்லவில்லை என்றால் சினிமாவை விட்டு எப்போதோ வெளியேறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார்".