மும்பை; பிரபல தொலைக்காட்சி நடிகர் 35 வயதில் மரணம்
நிதினுடன் ஒன்றாக நடித்தவரான விபுதி தாக்குர், அவருடைய சமூக ஊடக பதிவில், நிதின் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்து இருக்கிறார்.;
மும்பை,
உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரை சேர்ந்தவர் நிதின் சவுகான் (வயது 35). மும்பை நகரில் வசித்து வந்த அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்திருக்கிறார். தாதாகிரி 2 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறார். எம்.டி.வி.யின் ஸ்பிளிட்ஸ்வில்லா 5 நிகழ்ச்சியில் தோன்றியிருக்கிறார். ஜிந்தகி டாட் காம், கிரைம் பேட்ரல் மற்றும் பிரெண்ட்ஸ் போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
அவர் கடைசியாக எஸ்.ஏ.பி. டி.வி.யின் தேரா யார் ஹூன் மெயின் என்ற தொடரில் நடித்திருக்கிறார். இந்நிலையில், நிதின் மரணம் அடைந்து கிடந்திருக்கிறார். இதனை அவருடன் நடித்தவர்களான சுதீப் சாஹிர் மற்றும் சயந்தனி கோஷ் இருவரும் உறுதி செய்துள்ளனர். எனினும், வேறு விவரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் தெரிவித்தனர்.
நிதினுடன் ஒன்றாக நடித்தவரான விபுதி தாக்குர், அவருடைய சமூக ஊடக பதிவில், நிதின் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்து இருக்கிறார். இதனையடுத்து, நிதினின் தந்தை மும்பைக்கு விரைந்துள்ளார்.