இங்கிலாந்து பிரதமரை சந்தித்த 'இந்தியன்' பட நடிகை

மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமரை சந்தித்ததோடு, இங்கிலாந்துக்கும் நேபாள நாட்டிற்கும் இடையே நூறாண்டு கால நட்பு இருக்கிறது என்று பெருமிதத்துடன் செய்த பதிவு வைரல் ஆகி வருகிறது.;

Update:2024-05-23 14:10 IST

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. நேபாள நாட்டை சேர்ந்த இவர் தமிழில் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா என பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே புற்று நோயால் பாதிக்கப்பட்டு பின்பு குணமடைந்து தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஹீரமண்டி வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துள்ளார். ரிஷி சுனக்கின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கும் நேபாளத்துக்கும் இடையேயான நட்பு ஒப்பந்தம் 100 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நடிகை மனிஷா கொய்ராலா உள்ளிட்ட நான்கு நேபாள பிரதிநிகளை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்துள்ளார்.

 

இது குறித்து மனிஷா கொய்ராலா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது:

"இங்கிலாந்துக்கும் நேபாளுக்குமான நட்பு உறவு 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதைக் கொண்டாடும் விதமாக என்னை அழைத்துள்ளனர். இது எனக்கு கிடைத்த பெரிய மரியாதை. பிரதமர் ரிஷி சுனக், நேபாளை பற்றி பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. பிரதமரின் இல்லத்தில் இருந்தவர்கள் ஹீரமண்டி வெப் தொடரை பார்த்து ரசித்ததாக தெரிவித்தனர். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது" என மனிஷா கொய்ராலா பகிர்ந்துள்ளார்.

மேலும் இங்கிலாந்து பிரதமர் அவர்களை சந்தித்து பேசியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் எங்கள் நாட்டில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கு மலையேற வாருங்கள் என்று அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நேபாளைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா 1959 முதல் 1960 வரை நேபாளத்தின் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்