தென்னிந்தியாவிற்கு சொந்தமானவர் ஜான்வி கபூர் ! - இயக்குனர் கொரட்டலா சிவா
நடிகை ஜான்வி கபூர் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து தெலுங்கில் தேவரா படத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் 'தேவரா' என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி இருக்கிறார். தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார். 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.
இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள 30-வது படம் 'தேவரா'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 27-ந் தேதி வெளியான இப்படம், இதுவரை ரூ.400 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், இயக்குனர் கொரட்டலா சிவா நடிகை ஜான்வி கபூர் பற்றி கூறியுள்ளார். அதில் "எனக்கு வடக்கு, தெற்கு என்ற பாகுபாடுகளின் மீது நம்பிக்கையில்லை. இங்குள்ள மக்கள் அனைவரும் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்தியாவை சேர்ந்தவர் என்றே நம்புகிறார்கள். ஏனென்றால், மறைந்த நடிகை ஸ்ரீதேவி எங்களுடையவர்கள் என கருதுகிறார். மேலும் இங்கு கிராமத்தில் இருப்பவர்கள் கூட ஜான்வி கபூரை தங்களது சொந்த மகளாக கருதுகின்றனர்" என்று கூறியுள்ளார்.
நடிகை ஜான்வி கபூர் தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டும் என்று நாங்கள் காத்திருந்தோம். தற்போது எங்களது ஆசை நிறைவேறி உள்ளது. 'தேவரா' படத்திற்கு பின்னர் ஜான்வி கபூருக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக தெலுங்கில் ஆர்.சி.16 என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.