மீண்டும் உருவாகும் 'அனகோண்டா' படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
இப்படத்தில் அண்ட்- மேன் நடிகர் பால் ரூட், ஜுமான்ஜி நடிகர் ஜாக் பிளாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சென்னை,
1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அனகோண்டா'. வெளியான நேரத்தில் மோசமான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வணிக ரீதியில் சர்வதேச அளவில் பெரிய வசூலைப் பெற்றது. இப்படத்தில் ஜெனிபர் லோபஸ், ஜான் வாய்ட், ஓவன் வில்ஸன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
தொடர்ந்து 2004-ல் இதன் இரண்டாம் பாகம் 'தி ஹண்ட் ஆப் தி ப்ளட் ஆர்கிட்' என்ற பெயரில் வெளியானது. இதன் பிறகு 2008, 2009, 2015 என மூன்று 'அனகோண்டா' திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகின. ஆனால் இதில் எந்தப் படமும் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது சோனி தயாரிப்பு நிறுவனம் 'அனகோண்டா' படத்தை மீண்டும் எடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தி அன்பெயரபிள் வெயிட் ஆப் மாஸிவ் டேலண்ட் படத்திற்கு பெயர் பெற்ற டாம் கோர்மிகன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில், அண்ட்- மேன் நடிகர் பால் ரூட், ஜுமான்ஜி நடிகர் ஜாக் பிளாக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அனகோண்டா திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.