'என் மகன் சாதித்தது போல் பெருமையடைந்தேன்' - அட்லீயை பாராட்டிய ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் சமீபத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் இயக்குனர் அட்லீயை பாராட்டி பேசியுள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் தற்போது ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது. இதற்கு முன் இவர் இயக்கிய இந்தியன் 2* திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இவர் அடுத்ததாக இந்தியன் 3 மற்றும் 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஷங்கரிடம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' மற்றும் அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படத்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஷங்கர் " நான் லியோ திரைப்படம் பார்த்தேன். மிக நன்றாக இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். ஜவான் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அட்லீ செய்த ஈடுபாடு, கடின உழைப்பு தெரிகிறது அது என்னை பிரமிக்க வைக்கிறது.
சாதாரணமாக எல்லாம் இந்த வெற்றி கிடைத்து விடாது. எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. என்னுடைய துணை இயக்குனர் இந்தளவுக்கு வளர்ந்துள்ளது. என் மகன் சாதித்தால் எவ்வளவு சந்தோஷம் மற்றும் பெறுமை படுவேனோ அதேப்போல் தான் இதுவும்" என கூறினார்.