'அமரன்' பட பாடலின் ஸ்பெஷல் வெர்ஷனை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ்
‘அமரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.;
சென்னை,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் சுமார் ரூ.170 கோடி வரை வசூலித்துள்ளது. விரைவில் ரூ.200 கோடியை நெறுங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீமான், அண்ணாமலை, ரஜினி, சிவகுமார், சூர்யா, ஜோதிகா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், எஸ்.ஜே.சூர்யா என பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படமானது வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதற்கு 'அமரன் திரைப்படத்தின் வெற்றிக்கு இனிய பரிசு வழங்கியதற்கு நன்றி' என எக்ஸ் தளத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பதிவிட்டார்.
இந்நிலையில் 'அமரன்' பட பாடலின் ஸ்பெஷல் வெர்ஷனை ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.