பிரபல மலையாள நடிகர் ஓட்டல் அறையில் சடலமாக மீட்பு
பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.;
திருவனந்தபுரம்,
பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் சினிமாவிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் லாரன்ஸ் சந்திப்பு அருகே உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். கடந்த இரண்டு நாட்களாக அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இந்த நிலையில் அவரது அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் கதவை திறந்து பார்த்தபோது திலீப் சங்கர் தரையில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை. தடயவியல் நிபுணர்கள் அறையை ஆய்வு செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.