மீண்டும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ராபர்ட் டவுனி ஜூனியர், ஜேம்ஸ் ஸ்பேடர் மற்றும் பலர்
ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நட்சத்திரங்களை மீண்டும் திரையில் கொண்டு வர எம்சியு முடிவு செய்துள்ளது.;
வாஷிங்டன்,
கடந்த 2008-ம் ஆண்டு வெளியான 'அயர்ன் மேன்' திரைப்படத்தின் மூலம் மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (எம்சியு) ஆரம்பமானது. மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதில் வரும் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அயர்ன் மேன் மற்றும் கேப்டன் அமெரிக்கா இந்த குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவ்வாறு ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சில கதாபாத்திரங்கள் 2019-ம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்திற்கு பிறகு வெளியேறினர். இதனால், மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் களையிழந்து காணப்படுகிறது. ரசிகர்கள் அவர்களின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்று மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நட்சத்திரங்களை மீண்டும் திரையில் கொண்டு வர முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி, வரும் 2026-ம் ஆண்டு வெளியாக இருக்கும் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அடுத்ததாக அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான்" படத்தில் அல்ட்ரான் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜேம்ஸ் ஸ்பேடரும் எம்சியுக்கு திரும்புகிறார். விஷன் சீரிஸில் நடிக்க உள்ளார். விஷன் பாத்திரத்தில் பால் பெட்டானியும் தொடர்ந்து நடிக்கிறார். எலிசபெத் ஓல்சனும் இந்தத் தொடரில் ஸ்கார்லெட் விட்சாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும் டாம் ஹாலண்ட் எம்சியுக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.. இருப்பினும், இது குறித்து மார்வெல் ஸ்டுடியோஸ் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.